காற்றினிலே வரும் கீதம் நமக்கு தெரியும். ஆனால் இது காட்டினிலே வரும் கீதம். ஆம், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் ‘காடுன்னா திரில்லு தான டா…’
‘பெடியா’ திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
வருண் தவானும் அவரது ஓநாய் கூட்டமும் நடனமாடும் ‘காடுன்னா திரில்லு தான டா…’ பாடல் சுறுசுறுப்பான இசையும் விறுவிறுப்பான நடன அசைவுகளையும் கொண்டதாகும். அபிஷேக் பேனர்ஜி மற்றும் பாலின் கபக் ஆகியோருடன் வருண் தவான் மற்றும் கீர்த்தி சனோன் நடனமாடும் இப்பாடல் திரையரங்கில் ரசிகர்களையும் ஆட வைக்கும் என்றால் அது மிகையல்ல.
இப்பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர், “பழங்குடி இசையை அதன் உண்மைத்தன்மை மாறாமல் இந்தப் பாடலின் வழியாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். பாடகர்கள் விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் தங்களின் உணர்வுப்பூர்வமான குரல் மூலம் இப்பாடலுக்கு உயிரூட்டி உள்ளனர். ‘பெடியா’ திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘தும்கேஸ்வரி…’ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த புத்தம் புது பாடலும் அவர்களை பரவசமூட்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றனர். இந்தி பாடலை விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் உடன் இணைந்து சித்தார்த் பஸ்ரூர் மற்றும் சச்சின்-ஜிகர் பாடியுள்ளனர்.
சச்சின்-ஜிகர் இசையில் அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தன் எழுதியுள்ள இந்த பாடலை பிரபல பின்னணி பாடகரான பென்னி தயாள் தமிழில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காட்டை பிரதிபலிக்கும் இசையும் கண்ணைக்கவரும் நடன அசைவுகளும் நிறைந்துள்ள இந்த பாடலில் வருண் தவானின் நடனம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்பாடல் மிகப்பெரிய வெற்றியடைவது உறுதி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் பிரமாண்டமான முறையில் வெளியிட உள்ளது.