உயிர் தமிழுக்கு டைட்டில் இந்த நேரத்தில் தேவையான ஒன்றுதான் ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

cinema news
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
 
கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
 
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
 
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது,
“வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல.. கதாநாயகன் தான்.. இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டுவர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான்.. அதேசமயம் இந்த படம் உருவாகும் வரை என்னை அவர் நம்பினார்.. அவரை நான் நம்பினேன்.. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன.. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கூட ஹீரோ என்றால் அது ஆனந்தராஜ் தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று கூறினார்.
நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி பேசும்போது,
“நான் முதன்முதலாக இயக்கிய நாயகன் படத்தில் ஆதம்பாவா இணை இயக்குநராக பணியாற்றினார். இன்று அவர் இயக்குநராக மாறி இருப்பதும் அவரது டைரக்ஷனில் நான் நடித்து இருப்பதும் சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார்.
 
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது,
“இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அமீர் கதாநாயகன் மட்டுமல்ல.. இந்த படத்தில் காதல் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுவரை அவரை கோபக்காரராக, அநீதிக்காக குரல் கொடுப்பவராக பார்த்திருப்போம். இதில் காதல் மற்றும் அரசியல் இரண்டிலும் பின்னிப்பிணைந்து நடித்து உள்ளதையும் பார்க்கலாம்” என்று கூறினார்.
 
நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது,
“ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குனர் அமீருடன் கூடவே பயணிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டு பட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. யோகி படத்திற்கு பிறகு இந்த உயிர் தமிழுக்கு திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும் என்று கூறினார்.
நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசும்போது,
“அநேகமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் சினிமா மேடை இதுவாகத்தான் இருக்கும். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு எதார்த்தமான அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்த படத்தில் காதலுக்காக அரசியலில் ஜெயிக்க போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அரசியலில் அவர் அழகாக காய் நகர்த்தும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இந்த படம் இன்னொரு மாநாடு போல  வெற்றிப்படமாக அமையும்” என்று கூறினார்.
 
நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது,
“அமீர் எனது மிக நெருங்கிய நண்பர்.. அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம்.. அவருக்கென என ஒரு தனி இடம் இருக்கிறது.. எனக்கு இன்னும் நடிப்பு பசி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரசியல் நையாண்டி மட்டுமே இல்லாமால் ஒரு நல்ல கதையும் இருக்கிறது” என்று கூறினார்.
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,
“இந்த படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும் கூட. என் படங்களை கூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்த படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான் அரசியலையும் அமீரையும் தவிர்க்கவே முடியாது.. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறினார்.
நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,
“இந்த படம் நிறைய நாட்கள் தயாரிப்பில் இருந்தது. வேறு யாரவது என்றால் இதை கிடப்பில் போட்டுவிட்டு சென்று இருப்பார்கள். ஆனால் இயக்குநர் ஆதம்பாவாவும் அமீரும் விடாமல் நின்று ரிலீஸ் வரை கொண்டு வந்து உள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக திடீரென ஒரு நாள் படப்பிடிப்பிற்கு கிளம்பு வேண்டியிருந்ததால், கோவையிலிருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு நெருக்கமான ஒன்று” என்று கூறினார்.
 
இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது,
“தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் எனிடம் பேசாமல் இருந்தார்.
 
நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த உயிர் தமிழுக்கு என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன். இந்த சமயத்தில் இது சரியான ஒரு டைட்டில்.
 
ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தில் அவருக்கு அப்படி சில காட்சிகள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்த கூட்டணி தொடரும். இளையராஜாவுக்கு பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்ஜிஆர் பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன..
இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள்..  இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும்.
 
நான் எப்போதும் கதையின் நாயகனாக தான் இருப்பேன்.. சினிமா என்பது இயக்குனரின் மீடியம்.. நாயகர்களால் தான் சினிமா என்கிற பிம்பத்தை தான் உடைக்க விரும்புகிறேன் அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம்.. உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை..
 
பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே  போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம்.. அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்..
 
விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன்.. ஏற்கனவே இறைவன் மிகப் பெரியவன் மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது.. அதை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவேன்” என்று கூறினார்.