ஆக்சன், குடும்ப, க்ரைம் என பல வித உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் உண்டு. இது அற்புதமான எள்ளல் சுவை கொண்ட திரைப்படம். பலருக்கும் எள்ளல் என்பதற்கும் நகைச்சுவை என்பதற்குமான வித்தியாசம் புரிவதில்லை.வாழ்க்கையின் எதார்த்தத்தை பகடி செய்வது.. அதில நகைச்சுவையுடன் சேர்ந்த ஆதங்கம், தத்துவார்த்த சுட்டிக்காட்டல் இருக்கும்.இதையெல்லாம் படித்துவிட்டு, படம் ஏதோ நமக்கு அந்நியமாக இருக்கும் என பயப்பட வேண்டாம். ரசித்துப் பார்க்கும் படம்.
அதே நேரம், வாழ்க்கையின் நிலையாமையையும், மனிதர்களின் சுயநல வக்கிரங்களையும் எள்ளல் செய்கிறது படம்.சார்லிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட மூத்த மகனுடன் தன் சொந்த வீட்டில் வசிக்கிறார்.மகனும் மகளும் சேர்ந்து திட்டமிட்டு அவரது வீட்டை விற்று பணம் தர கோருகிறார்கள். வாழும்வீட்டை விற்பதா என சார்லி மறுக்கிறார்.
இந்த நிலையில், ஊரில் இருக்கும் ஒரு அங்காடிக்கு சார்லி செல்கிறார். அந்த நேரத்தில் அங்காடி இடிந்து விழுந்ததாக செய்தி வருகிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் அரசாங்கம் தருவதாக அறிவிக்கிறது.20 லட்ச ரூபாய் கிடைக்கிறதே என்ற ஆவலில் குடும்பத்தினர் சில திட்டங்கள் போடுகிறார்கள்.ஆனால் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. அதன் பிறகு என்ன என்பதுதான் கதை.சார்லியின் மூத்த மகனாக வரும் லிங்கா குடும்ப செலவுகளை சுமக்க முடியாத அழுத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநலம் மேலிடும் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தங்கையும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஈகோவில் மோத.. இடையில் அவர் தவிக்கும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்நதியின் நடிப்பும் அற்புதம்.சார்லின் மகளாக காயத்ரியும் இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார். அவரது கணவராக வரும் விவேக் பிரசன்னா எப்போதும் போல் சிறப்பான நடிப்பு.லிங்கா, காயத்ரியன் கடைசி தம்பியாக வரும் தீனாவும் யார் இவர் என கேட்க வைக்கிறார்.இடைவேளை வரை படம் விறு விறு. அதன் பிறகு சற்றே மெதுவாக நகர்ந்தாலும் ரசிக்கவைக்கிறார்கள்.மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரு வீட்டுக்குள்ளேயே கோணங்களை மாற்றி மாற்றி தொய்வில்லாமல் காட்சிகளை அளித்திருக்கிறார். சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் சிறப்பு.ஆஹா தமிழ் ஒரிஜினலாக இந்தப் படத்தை தயாரித்திருக்கும் கே.வி.துரைக்கு வாழ்த்துகள்.