full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :
Latest Update

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் திரைப்பட விமர்சனம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்..

சேலத்தில் உள்ள காசிபுரம் தனித் தொகுதியில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பகத் பாசில். அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு. ஆதிக்க வர்க்க மனோபாவம் கொண்டவர். தனக்கு கீழ் எல்லோரும் அடங்கி போக வேண்டும் என்று நினைப்பவர். வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை சண்டையை கற்றுக் கொடுப்பவர். உதயநிதியின் காதலியான கீர்த்தி சுரேஷ் இலவச கல்வி மையம் நடத்துகிறார். இதனால் தனது தொழிலுக்கு பாதிப்பு வர கல்வி மையத்தை ஆட்களை வைத்து அடித்து நொறுக்குகிறார் பகத் பாசிலின் அண்ணன் சுனில். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த பகத் பாசில் வீட்டுக்கு வடிவேலுவும் உதயநிதியும் செல்கின்றனர். அங்கு வடிவேலுவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாததால் ஏற்படும் கைகலப்பில் பகத் பாசிலை உதயநிதி அடித்து விடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் பகத் பாசில் வேறு கட்சிக்கு மாறுகிறார். இப்பிரச்சினையை தனது தனிப்பட்ட விரோதமாக நினைக்கும் பகத் பாசில் அடுத்து வரும் தேர்தலில் எதிர் எதிர் மோதுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே மாமன்னன்.

இந்த முறை தேர்தல் அரசியலை கையில் எடுத்துள்ள மாரி செல்வராஜ், ஆதிக்க வர்க்கத்தின் அதிகார திமிரை தீர்க்கமாக கேள்வி கேட்டுள்ளார். அடுத்தவரை அடக்கி ஆளத் துடிக்கும் அரசியல் வாரிசுக்கும் அடங்க மாட்டேன் எதிர்த்து நிற்பேன் என்று எதிர்க்கும் மற்றொரு அரசியல் வாரிசுக்கும் நடக்கும் யுத்தமாக இதனை எடுத்துள்ளார். மாமன்னனாக வடிவேலு. இத்தனை நாட்களாக இந்த நடிப்பை எங்கே ஒளித்துவைத்திருந்தார் என்று தெரியவில்லை. படத்தில் நிஜ கதாநாயகன் இவர்தான். இடைவேளை காட்சி மிரட்டல். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக். உதயநிதி முதல் பாதியில் இறுக்கமாக வருகிறார் அதற்காக கதையில் காரணம் உண்டு. அப்பாவை கண்முன்னால் அடிக்கும் போது கோபம் வரும் இடத்தில் நல்ல மகனாக ஈர்க்கிறார்.

பகத் பாசில் மனுசன் பிச்சு உதறிஉள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். கட்சியை‌விடை தனது அதிகாரம், தனது சமூகத்தின் ஆளுமைதான் முக்கியம் என நினைப்பது. அதற்காக எந்த எல்லைக்கும் போகும் இவரது நடிப்பு அபாரம். கீர்த்தி சுரேஷ் அவ்வளவு வேலை இல்லை என்றாலும் அத்தனை பிரச்சினைக்கும் ஆரம்பம் இவர்தான். தேனி ஈஸ்வரனின் கேமரா கதையின் இறுக்கத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பயணித்துள்ளது. மாரி செல்வராஜ் தான் பேச வேண்டிய அரசியலை முடிந்தவரை சமரசம் இன்றி பேச முயன்றுள்ளார். முதல் பாதி தொடங்கி தெளிவாக முடிந்துள்ளது. இரண்டாம் பாதியில் தேர்தல், வாக்கு எண்ணிக்கை என சற்று சோர்வடைய வைத்தாலும் கிளைமாக்ஸ் பட்டாசு. மொத்தத்தில் மாமன்னன் – தலைவன்.