full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மாதக்கணக்கில் பின்னணியிசை

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மாதக்கணக்கில் பின்னணியிசை

சந்திரமுகி 2′ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி

*’சந்திரமுகி 2′ படத்திற்காக இரண்டு மாதம் தூக்கத்தை தொலைத்த இசையமைப்பாளர் கீரவாணி

 

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான ‘ஆஸ்கார் நாயகன்’ எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”லைக்கா புரொடக்ஷன்ஸின் ‘சந்திரமுகி 2’ பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்..!” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால்.. திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.