full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணி ஜெயித்ததா? – மார்க் ஆண்டனி திரை விமர்சனம்

விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணி ஜெயித்ததா? – மார்க் ஆண்டனி திரை விமர்சனம்

 

மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம். 

 

1975ல் செல்வராகவன் கடந்த காலத்தில் உள்ளவர்களுடன் பேசக்கூடிய அற்புதமான போனை கண்டுபிடிக்கிறார். அதன்‌ மூலம் தனது கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை மாற்றுகிறார். விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் நண்பர்கள் இருவரும் அந்த ஊரில் கேங்ஸ்டராக இருக்கின்றனர். இவர்களை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று எதிரணியில் சுனில் துடித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இரு அணிக்கும் நடந்த கோஷ்டி மோதலில் விஷால் கொல்லப்படுகிறார். அதே இடத்தில் செல்வராகவனும் கொல்லப்படுகிறார். அதன்பிறகு 1995ம் ஆண்டு எஸ்ஜே சூர்யா மிகப் பெரிய டானாக இருக்கிறார் அவரது மகனான மற்றொரு எஸ்ஜே சூர்யா உதவாக்கரையாக இருக்கிறார். இதனால் விஷாலை மகனாக நினைத்து வளர்கிறார். விஷாலிடம் அவனது அப்பா மிகக் கெட்டவன் என்று சொல்லி வளர்க்கிறார் எஸ்ஜே சூர்யா இதனால் அப்பா என்றாலே விஷாலுக்கு பிடிக்காது. இந்த நிலையில் அந்த டைம் டிராவல் போன் விஷாலுக்கு கிடைக்கிறது. இதனால் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே கதை. 

 

தனது முந்தைய படங்களை போல் இல்லாமல் ஒரு அருமையான பொழுதுபோக்கு கதையை ரெடி செய்து நல்ல படமாக கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். லாஜிக் மறந்து திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் படம் உள்ளது.‌ விஷால் அப்பா, மகனாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.‌ மகனாக அவரது நடிப்பு சற்று மிகையாக தெரிந்தாலும் அப்பாவாக பக்காவாக நடித்துள்ளார். 

 

எஸ்ஜே சூர்யா என்ன நடிகன்யா. சும்மா தெறிக்க விட்டுள்ளார்.‌ நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அப்பாவாக அதகளம் செய்தாலும் மகனாக வரும் எஸ்ஜே சூர்யா அட்டகாசம். அதுவும் அவரது நடிப்பும் உடல்மொழியும் பிச்சு உதறியுள்ளார். அவர்தான் படத்தின் நாயகன். விஷால் அவருக்கு இடம் கொடுத்து நடிக்க விட்டுள்ளார். அதனால் தான் படம் நன்றாக வந்துள்ளது. ரிது வர்மா வழக்கமான நாயகியாக வந்து போகிறார். ரெடின் கிங்ஸ்லி பாவம் நகைச்சுவை செய்ய போராடுகிறார். நிழல்கள் ரவி, அபிநயா சப்போர்ட்டிவ். சுனில் கதாபாத்திரம் ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி போகப் போக சப்புன்னு முடிகிறது.‌ சில்க் ஸ்மிதா வரும் காட்சி திரையரங்கில் வெடிச் சத்தம். முதல் பாதி முதல் அரை மணி நேரம் பொறுமையாக செல்கிறது.‌ இடைவெளி காட்சி யூகித்ததுதான் என்றாலும் நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் எஸ்ஜே சூர்யா அதிரடி தான். அதுவும் கடந்த காலத்தில் இருக்கும் தனது அப்பா எஸ் ஜே சூர்யாவுடன்‌ போனில் பேசும் காட்சிகள் ரகளை. படம் முழுவதும் லாஜிக் மிஸ்டேக் ஏராளம். ஆனால் அதை எல்லாம் மறந்து இரண்டரை மணி நேரம் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் தியேட்டர் அதிர்கிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் அருமை. விஜய் முருகனின் கலை இயக்கம் ரெட்ரோ லுக்கை கண்முன் நிறுத்துகிறது. படம் நிச்சயம் இளைஞர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. 

 

மொத்தத்தில் இந்த முறை சொல்லி அடித்துள்ளார் விஷால். மார்க் ஆண்டனி – பாஸ் மார்க். ரேட்டிங் 3.5