அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஜோ நீண்ட நாளுக்கு பிறகு வரும் காதல் படம் என்று சொன்னால் மிகையாகாது. சரி படம் நமக்கு காதலை தருகிறதா இல்லை சோதிக்கிறதா என்று பார்ப்போம்.
ஜோ’வாக படத்தில் வருபவர் ஹீரோ ரியோ. பள்ளி பருவத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. நண்பர்களுடன் ஜாலியாக இருந்து தனது பள்ளி பருவத்தை முடித்து கல்லூரிக்குள் நுழைகிறார்.
அதே நண்பர்களுடன் ஆட்டம், கொண்டாட்டமாக இருக்க நாயகி மாளவிகாவை காண்கிறார். கண்டதும் காதல் வயப்படுகிறார். தொடர்ந்து மாளவிகாவின் பின்னால் சுற்றி சுற்றி, ஒரு தலை காதலை இருதலை காதலாக மாற்றுகிறார் ரியோ.
கல்லூரி வாழ்க்கை முடிந்து நாயகி மாளவிகா அவரது மாநிலமான கேரளாவிற்கு சென்று விடுகிறார். இதனால், மொபைல் காதலாக மாற இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை வருகிறது.
வீட்டில் சென்று பேச போன இடத்தில் சிறு கைகலப்பு ஏற்பட, ரியோவை வெறுத்து விடுகிறார் மாளவிகா.
இந்த காட்சிகள் அனைத்தும் ப்ளாஷ் பேக் காட்சிகளாக வர, நிகழ்காலத்தில் மற்றொரு நாயகியான பாவ்யாவை திருமணம் செய்கிறார் ரியோ.
மாளவிகாவுடனான காதல் என்னவானது.? திருமணம் வேண்டாம் என்றிருந்த பாவ்யாவின் கழுத்தில் ஏன் ரியோ தாலியை கட்டினார்.? என்ற கேள்விக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை இருக்கிறது.
மிக நேர்த்தியாக ஒரு அழகான காதல் கதையை நமக்கு கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம்.
ரியோக்கு இந்த படம் மிக பெரிய நல்ல பேரை மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நடிகன் என்ற பெயரையும் வாங்கி கொடுக்கும் கதையின் நாயகனாக நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் ரியோ.. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே மனதிற்குள் நச்’சென்று பதிந்து விடுகிறது ஜோ’வின் கதாபாத்திரம்.
பள்ளி, கல்லூரி, திருமண வாழ்க்கை என மூன்று வெவ்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு தனது வாழ்வியலை வேறுபடுத்தி காண்பித்திருக்கிறார் நாயகன் ரியோ. தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி, நடித்து காட்டியிருக்கிறார்.
அழகு தேவதைகளாக காட்சிக்கு காட்சி வந்து நம்மை ஈர்த்திருக்கின்றனர் மாளவிகாவும் பாவ்யாவும்.
தன் முதல் படத்திலே சிக்ஸர் அடித்து விட்டார். அழகு நடிப்பு இப்படி எல்லாத்திலும் நம்மை வெகுவாக கவர்கிறார். முதல் பாதியில் மாளவிகாவும் இரண்டாம் பாதியில் பாவ்யாவும் காட்சிகளில் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றனர். அதிலும், மாளவிகாவின் ஒரு பங்கு மேல் தான்.
படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அவர்கள் பங்கை கொடுக்கப்பட்டதை சிறப்பாக செய்திருந்தனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தான்.
முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறார். ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாக ரசனையாக கொடுத்து நம்மை பெரிதாகவே ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பாடல்கள் நம்மை ரசிக்க வைத்தாலும் , பின்னணி இசையில் சித்துகுமார் மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறார்.
கதைக்கு உடல் அமைத்து, திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம். படத்தில் வரும் ஒரு காட்சியாவது படம் பார்ப்பவர்களின் வாழ்வோடு நிச்சயமாக ஒன்றிருக்கும்.நிச்சயமாக படம் பார்க்கும்போது இது நம் வாழ்க்கையில் நடந்து இருக்கு என்று நம்மை தோன்ற வைக்கும்
காதலின் வாழ்வியலை மிக அழகாக கொண்டு வந்து நம் கண்களில் ஈரத்தினை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா இயக்குனராக ஹரிஹரன் ராம் உயர்ந்து நிற்பார். அதற்கு ஜோ’வே அடித்தளம்..
ஜோ – சினேகிதன்
ஜோ திரைவிமர்சனம்