பார்க்கிங் திரைவிமர்சனம்
பார்க்கிங் இந்த வார ரிலீஸில் முக்கிய படம் என்று சொன்னால் மிகையாகாது இதற்கு காரணம் ஹாரிஸ் கல்யாண் இந்துஜா தான் முக்கிய காரணம் அதோடு ஹரிஷ் கல்யாண் படங்கள் என்றால் நிச்சயம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்பது ஒரு முக்கிய காரணம். அதோடு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் இந்தப்படத்துக்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு உண்டானது அனைவரும் அறிந்த விஷயம் இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்று பார்ப்போம்.
இந்த ஹரிஷ் கல்யாண் ,இந்துஜா, என்,எஸ்.பாஸ்கர், ராமா ராஜேந்தர், பிராத்தனா நாதன்,இளங்கோ மற்றும் பலர் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சாம் .சி.எஸ்.இசையில் வெளிவந்து இருக்கும் படம் பார்க்கிங்
படத்தின் மைய கரு என்று சொன்னால் அது ஈகோ தான் என்று சொல்லணும் இருவருக்குள் வரும் ஈகோ வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை உண்டு பண்ணுகிறது என்பதை சொல்லும் படம் தான் இந்த பார்க்கிங்
அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் மகளோடு 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் மாடி பகுதியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் மனைவி இந்துஜா புதிதாக குடி வருகிறார்கள். குடி வந்த சில நாட்களில் ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரை அவர் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் நிறுத்தி வைக்க, ஏற்கனவே அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு அசவுக்கரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பேச்சில் ஆரம்பிக்கும் மோதல், ஈகோ யுத்தமாக உருவெடுத்து நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நிகழ்கிறது. இதனால் யார் யார், எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ‘பார்க்கிங்’.
நாயகன் ஹரிஷ் கல்யாண், இளமையாக இருந்தாலும் முதிர்ச்சியான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். தனது புதிய காருக்கு ஏற்படும் சிறு பாதிப்பில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துபவர், பார்க்கிங் பிரச்சனையில் விஷ்வரூபம் எடுக்கும் போதும் சரி, தன் மீது விழுந்த பாலியல் குற்றச்சாட்டால் மனமுடிந்து போகும் இடங்களிலும் சரி நடிப்பில் அசத்தியிருப்பதோடு, தன்னால் எப்படிப்பட்ட கதபாத்திரத்தையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.
அரசு ஊழியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அந்த பதவியில் இருப்பவர்களின் மிடுக்கோடு நடித்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லத்தனத்தை முகத்தில் காட்டி மிரட்டுகிறார். 60 வயதை நெருங்கினாலும் ஈகோவினால் இளைஞரிடம் மோதும் எம்.எஸ்.பாஸ்கரின் நடவடிக்கைகள் அடிமட்டமாக இருப்பதோடு, அவற்றை செய்யும் போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. எந்த வேடமாக இருந்தாலும் அதை மிக சரியாக கையாளும் எம்.எஸ்.பாஸ்கர், காமெடி வாடை துளி கூட வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, தன் உடல்மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் என அனைத்திலும் புதியவராக ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகிறார்.
ஹரிஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா, கதையோட்டத்தை வலுப்படுத்துவதற்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா, மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு ஆகியோரது நேர்த்தியான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
ஒளிப்பதிவாலர் ஜிஜு சன்னி, ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைக்கதையை மிக இயல்பாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை வேகமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு காட்சிகளை விறுவிறுப்பாக கடத்துவதோடு, சில இடங்களில் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்து படபடக்க வைத்துவிடுகிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரை சிக்க வைக்க ஹரிஷ் கல்யாண் போடும் திட்டம் பரபரப்பின் உச்சம்.
வாடகை குடியிருப்பில் வசிப்பவர்கள் மட்டும் அல்ல சொந்த வீட்டில் இருப்பவர்கள் கூட சில சமயங்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதிவதோடு, கதையோட்டத்துடன் தங்களையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.
இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதே கிடையாது, ஆனால் மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
புதுமை இல்லாத க்ளைமாக்ஸ், இருவருக்கும் இடையிலான பிரச்சனையின் போது நடக்கும் சம்பவங்கள் யூகிக்க கூடியதாக இருப்பது போன்றவை சில இடங்களில் சிறு சிறு தொய்வுகளை ஏற்படுத்தினாலும், இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த ‘பார்க்கிங்’.