வீரப்பன் பற்றியம் அவர் மரணத்தை பற்றியும் பல வித வதந்திகள் உண்டு அவற்றுக்கு முற்று புள்ளி வைக்க வந்துள்ள படம் தான் இந்த கூச முனிசாமி வீரப்பன். அதற்கு முக்கிய காரணம் இயக்குனரின் ஆய்வு தான் வீரப்பன் பழகிய பலரிடம் அதோடு முக்கிய பிரமுகர்களின் உதவியோடு இந்த படத்தின் கதையை அமைத்துள்ளார் .
இயக்குனர் ஷரத் ஜோதி இயக்கத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ஆவணத் தொடர் தான் இந்த கூச முனிசாமி வீரப்பன்.
பல வருடங்களாக பலர் வீரப்பனைப் பற்றி பேசியதையும் கதைகளை அடுக்கி வைத்ததையும் நாம் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். ஆனால், தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை தானே வீடியோ மூலம் வீரப்பன் கூறியிருக்கும் தொடர் தான் இந்த கூச முனிசாமி வீரப்பன்.
பிரபல பத்திரிகையாளரான நக்கீரன் கோபால், 1990 ஆம் ஆண்டுகளில் நடத்திய கள ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் தொகுப்புகளை வைத்து இந்த தொடரை உருவாக்கியிருக்கிறார். சுமார் 6 தொடராக கொண்ட இந்த சீரிஸ் வரும் 14 ஆம் தேதி ஜீ5ல் வெளியாகவுள்ளது.
தன் தந்தை , தாய், உடன்பிறந்தவர்களில் ஆரம்பித்து, தான் எப்படி ஒரு வேட்டைக்காரனாக உருவெடுத்தேன் என்பதை தெளிவாக கூறுகிறார் வீரப்பன். கடத்தலில் மட்டுமே ஈடுபட்டு வந்தவீரப்பன் எந்த சூழலில், யாரால் கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்பதையும் வீரப்பன் கூறியிருக்கிறார் இந்த தொடரில்.
அதுமட்டுமல்லாமல், தன்னை துரோகத்தால் வீழ்த்த நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 21 பேரை கன்னிவெடி வைத்து கொன்ற வீரப்பனின் கொடூர வாழ்க்கை பயணம் அதில் இருந்து துவங்கியது.
தொடர்ந்து தமிழக கர்நாடக காவல்துறைக்கும் வீரப்பனைச் சார்ந்தவர்களுக்கும் தொடர் மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என அனைத்தையும் தன்னைச் சுற்றி நட்ந்தவற்றை வீரப்பன் தெளிவாக கூறியிருக்கிறார்.
வீரப்பன் கூறியதுமட்டுமல்லாமல், அவரைச் சுற்றி நடந்தவற்றையும் வீரப்பன் அருகில் இருந்தவர்கள் வாழ்ந்தவர்களும் அவரைப் பற்றி கூறியிருக்கிறார்கள். அதையும் இதில் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
வீரப்பனால் மட்டுமல்லாது காவல்துறையாலும் பொதுமக்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்தித்தனர் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
இதன் ஒளிப்பதிவு தொடருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பட்த்திற்கு மிகப்பெரும் தூண் என்றால் அது பின்னணி இசை தான். சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசையில் காட்சிகள் நம் கண்களை விட்டு விலகாமலும், மனதை விட்டு அகலாமலும் பார்த்துக் கொண்டார்.
ஒளிப்பதிவில் அவ்வளவு தெளிவு. ஒரு ஆவணத் தொடரை இந்த அளவிற்கு கச்சிதமாக கொடுக்க முடியுமா என்று வியக்க வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.
பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வீரப்பனோடு உடன் இருந்தவர்கள் என அனைவர் பார்வையிலும் வீரப்பனை பற்றி முழு வரலாறையும் இந்த தொடரில் கூறியிருப்பது பெரும் பலம்.
சீசன் 1 மட்டுமே இதில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், இரண்டாவது சீசனில் இன்னும் பயங்கரமான அரசியல் விளையாட்டுகள் இருப்பதையும் கூறி முடித்திருக்கிறார்கள்.
வெறும் பேசுவதை மட்டுமே காட்டிக் கொண்டிருக்காமல் களத்திற்குச் சென்று ஒவ்வொரு காட்சியையும் ஆவணமாக எடுத்து அதை கோப்புக் காட்சி போல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சரத் ஜோதி. எந்த இடத்திலும் சோர்வடைய விடாமல், ஒவ்வொரு இடத்திலும் காட்சிகளை பரபரபாக்கிக் கொண்டு சென்றதில் வென்றிருக்கிறார் இயக்குனர்.
ஜீ5 இணையத்தில் வரும் தொடர் என்றாலே அது எப்போதும் சற்று கூர்நோக்கப்படும், வென்றும் காட்டும்., அதேபோல் கூச முனிசாமி வீரப்பன் இணையத் தொடர் இதுவரை ஜீ5ல் வெளியான தொடரில் இது முதன்மை பெரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழக அரசியல் முதல் கர்நாடக அரசியல் வரை வீரப்பனின் குரல் என்னமாதிரி ஒலித்தது என்பதை காட்டியிருக்கும் குழுவினருக்கு வாழ்த்துகள்.