சத்தமின்றி முத்தம் தா – திரைவிமர்சனம்
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ”சத்தம் இன்றி முத்தம் தா”.
இந்த படத்துக்கு ஜுபின் இசையில் யுவராஜ் ஒளிப்பதிவில் தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ். தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.S
கதையை பார்ப்போம் ….
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா. இப்படியாக செல்லும் போது, அவ்வப்போது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார்.
வாழ்க்கை வெறுத்துப் போனது போல் இருக்கும் ப்ரியங்காவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.
அடுத்து என்ன நடந்தது.?? ஸ்ரீகாந்த் யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
இதுவரை ஏற்றிறாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அடுத்தடுத்து கொலைகளை செய்து யார் இவர் என்ற கேள்வியை அடுக்கடுக்காக வைத்துக் கொண்டு செல்வது சுவாரஸ்யம்.
ப்ளாஷ் பேக் காட்சிகளில் கண்களில் ஈரம் வர வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
நாயகி பிரியங்கா தான் படத்தின் மையக்கருவாக வந்து நிற்கிறார். காதல், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறார்.
ரகு கதாபாத்திரத்தில் வந்த வியான், தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார்.
எதற்காக வியான் தன் மனைவியை விட்டு அடுத்த ஒரு பெண்ணை தேடினார் என்பதற்கான பதில், ஒரு சுவாரஸ்யம் தான்.
நிஹாரிகாவின் நடிப்பும் அழகு தான்.
காட்சிகள் ஆங்காங்கே தொய்வடைவதும், லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது மட்டுமே படத்திற்கு சற்று பலவீனம்.
கதை, திரைக்கதை, பின்னணி இசை, பாடல் என படத்தில் பல பாசிடிவ் விஷயங்களை கொட்டி வைத்திருக்கிறார் இயக்குனர். யுவராஜ்ஜின் ஒளிப்பதிவு வெளிச்சம் காட்டியிருக்கிறது.
பல ட்விஸ்ட் காட்சிகள் படத்தில் இருப்பதால், கதையின் சுவாரஸ்யத்தைக் கருதி சில பல காட்சிகளை விவரிக்க முடியவில்லை.
விடுமுறையை கொண்டாட சரியான படைப்பாக வந்திருக்கும் “சத்தமின்றி முத்தம் தா” படத்தை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.
சத்தமின்றி முத்தம் தா – நெஞ்சில் ஒட்டியது