வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம்
எம்.எஸ்.பாஸ்கர்,திரவ்,இஸ்மாத்பானு, ரமா,மாஸ்டர் காத்திகேயன்,தேவ் ஹபிபுல்லா,விஜயலக்ஷ்மி மற்றும் பலர் நடிப்பில் சங்கர் இசையில் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வெப்பம் குளிர் மழை
மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் – இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள். ஊரார், உறவினர் என சுற்றியிருப்பவர்களின் இத்தகைய பேச்சுக்களால் கஷ்ட்டப்படும் தம்பதி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி இருவரையும் பரிசோதித்ததில் திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.
ஆனால், இந்த விசயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் இஸ்மத் பானு, அதே சமயம் குழந்தையின்மை பிரச்சனையால் தனது கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார். அந்த முடிவால் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே தம்பதி இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? என்பதை தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மையமாக கொண்டும், அதற்கான அறிவியல் தீர்வையும், அதை ஏற்றுக்கொள்ள தயங்கும் மக்களுக்கு அறிவுரையாகவும் சொல்வதே ‘வெப்பம் குளிர் மழை’.
நாயகனாக நடித்திருக்கும் திரவ், முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். மனைவி உடனான காதல், ஊர் மக்களின் பேச்சால் கலங்குவது, தனது தவறை நினைத்து கதறி அழுவது, மனைவி தனக்கு தெரியாமல் செய்த காரியத்தால் தவிப்பது, என்று அனைத்து உணர்வுகளையும் தனது ஆழமான நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கார்
பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக
திண்ணையில் உட்கார்ந்து நையாண்டி செய்யும் கிராமத்து தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பழைய தலைமுறையின் ஆரோக்கியம் மற்றும் கவலை இல்லாத வாழ்க்கையை பிரதிபலிக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகன், நாயகிக்கு இணையாக நடிப்பில் கவனம் பெறுகிறார். மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, கருப்பு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நட்சத்திரங்களை தவிர, ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும், எந்தவித பதற்றமும் இன்றி கேமரா முன்பு நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் எளிமையான ஒளிப்பதிவு, எளிமையான கிராமத்தை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது.
சங்கர் இசையில், திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து வாசம் வீசுவதோடு, புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.
பல திரைப்படங்களில் சிறு பகுதியாக குழந்தையின்மை பிரச்சனை பற்றி பேசப்பட்டிருந்தாலும், இந்த படத்தின் மையக்கருவாக குழந்தையின்மை பிரச்சனை பற்றி பேசியிருந்தாலும், அதை சுற்றி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை ஜனரஞ்சகமாகவும், இயல்பாகவும் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
குழந்தையின்மை என்பது தம்பதி அல்லது தனிமனித பிரச்சனை இல்லை, அது ஒரு விளைவு, அது நடக்கும் போது நடக்கும். ஆனால், அதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றுவது சமூகம் தான், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து, அதற்கான அறிவியல் தீர்வு இருந்தாலும், அதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை, குறிப்பாக கிராம மக்கள் இது தொடர்பான புரிதல் இல்லாமல் இருப்பதையும், அவர்களுக்கு இதை புரிய வைக்கவும் முயற்சித்திருக்கிறார்.
எளிமையான கிராமத்து பின்னணியில், சமூகத்திற்கு தேவையான கருத்தை எந்தவித நெருடல் இல்லாமல் நாகரீகமாகவும், எதார்த்தமாகவும் பேசியிருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து, அதை சிறப்பான திரை மொழி வடிவில் கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அந்த கிராமத்தில் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறார்.