ஒயிட் ரோஸ்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5
ஸ்ரீதரன்,பேபி நக்ஷ்த்திரா சசி லையா,ரித்திகா மற்றும் பலர் நடிப்பில் சுதர்ஷன் இசையில் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஒயிட் ரோஸ்
கதையை பாப்போம் …
பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷிடம், சிக்கிக்கொள்ளும் நாயகி கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை, கயல் ஆனந்தி யார்?, பாலியல் தொழிலாளிகளை கொலை செய்பவரிடம் அவர் சிக்கியது எப்படி?, பெண்களை கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையோடு, சொல்வது தான் ‘ஒயிட் ரோஸ்’.
தமிழ் சினிமாவில் வெளியாகும் சைக்கோ க்ரைம் திரில்லர் படங்களை, எதாவது ஹாலிவுட் உள்ளிட்ட வெளிநாட்டு படங்களுடன் ஒப்பிட்டோ அல்லது அதன் பாதிப்பு என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை, தமிழ் சினிமாவில் வெளியான சைக்கோ க்ரைம் திரில்லர் படங்களின் பாதிப்பாகவே இருக்கிறது. அவை எந்த படங்கள் என்பது படத்தை பார்க்கும் போது உங்களுக்கே புரிந்துவிடும்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, வழக்கம் போல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஒரு குழந்தைக்கு தாய் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குழந்தை முகத்தோடு இருக்கிறார். கொலையாளியிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க போராடுபவர் தனது நடிப்பு மூலம் பயம் மற்றும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்திவிடுகிறார்.
சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வசனம் பேசாமல் நடித்திருக்கிறார். சைக்கோ கொலையாளி என்றாலும், அவருக்கான வாய்ப்பு என்னவோ மிக குறைவு தான். அதை தன்னால் முடிந்தவரை நிறைவாக செய்ய மெனக்கெட்டிருக்கிறார். அதே சமயம், இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணிக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார்.
கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் தங்கள் பணி மூலம் ரசிகர்களிடத்தில் பயத்தை கடத்த பெரும் முயற்சி மேற்கொண்டாலும், அவ்வபோது இது சைக்கோ க்ரைம் திரில்லர் ஜானர் படம் என்பதை மறந்துவிட்டு பணியாற்றியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் கே.ராஜசேகர் படத்தின் முதல் காட்சியிலேயே இது ஏற்கனவே வந்த ஒரு தமிழ்ப் படத்தின் பாதிப்பு என்பதை புரிய வைத்துவிடுவதோடு, அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை ரசிகர்கள் கணிக்கும்படி கதையை நகர்த்தி செல்கிறார்.
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி, அவரை பிடிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை ஆகியவை நாம் ஏற்கனவே பார்த்தது என்பதால், அந்த ஏரியாவில் அதிகம் கவனம் செலுத்தாத இயக்குநர், சைக்கோ கொலையாளிடம் சிக்கிக் கொள்ளும் கயல் ஆனந்தியை மையப்படுத்தி அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் சைக்கோ கொலையாளியின் பின்னணி பற்றி சொல்வது படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.
படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காட்சிகளை வேகமாக கடத்தி செல்லும் இயக்குநர் மருத்துவக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் உள்ளிட்ட பல விசயங்களை விரிவாக சொல்லாமல் கடந்து செல்வது திரைக்கதையை தொய்வடைய செய்கிறது.
மொத்தத்தில், பெண்களை கற்பழித்து கொலை செய்தால் அது ‘சிவப்பு ரோஜாக்கள்’, பெண்களை கொலை செய்துவிட்டு கற்பழித்தால் அது தான் இந்த ‘ஒயிட் ரோஸ்’