full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்…

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது…

ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக  செய்துள்ளோம். ஆதி அண்ணா கடுமையாக உழைத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும், நன்றி.

நடிகை பிரணிகா பேசியதாவது…
இந்தப்படத்தில் ஆதி அண்ணா சிஸ்டர் கேரக்டர் செய்துள்ளேன், ரொம்ப சந்தோசம்.  அதிலும் என் முதல் படமே வேல்ஸ் பிலிம்ஸில் செய்வது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சக படமாக இருக்கும். இந்தப்படம் புது அனுபவமாக இருந்தது,  அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை மதுவந்தி பேசியதாவது…
இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். நான் நடிப்பேனா? என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக்குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் சேட் உள்ள பாத்திரம், அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த குழுவிற்கு முழு சுதந்திரம் தந்த, வேல்ஸ் ஐசரி சாருக்கு என் நன்றிகள். ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25 வது படம், வாழ்த்துக்கள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை அனிகா சுரேந்திரன் பேசியதாவது…
நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. இந்த கதாப்பாத்திரம் தந்த இயக்குநர் கார்த்திக் சாருக்கு நன்றி. தயாரிப்பு தரப்பினருக்கும் என் நன்றிகள்.  மிக வித்தியாசமான கதாப்பாத்திரம், உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் பாத்திரம், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகை காஷ்மீரா பர்தேஷி பேசியதாவது…
ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இரண்டாவது படம், மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர், திறமையாளர் அவரது 25 வது படத்திற்கு எனது வாழ்த்துக்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…
ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது, ஆனால்  கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள், இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக  இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது…
வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர், அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார்.  அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.