சூரியின் ஆக்ஷன் அவதாரம் – “கருடன்” திரை விமர்சனம்!
எதிர் நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கருடன். இப்படத்தின் கதை என்னவென்றால், உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். சிறுவயதில் அனாதையான சூரியை தன்னுடனே வைத்துக் கொள்கிறார் உன்னி முகுந்தன். சூரியும் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமாரிடம் விசுவாசமாக இருக்கிறார். அமைச்சர் ஆர்வி உதயகுமார் சென்னையில் உள்ள கோயில் நிலத்தை அபகரிக்க பார்க்கிறார். அந்த நிலம் உன்னி முகுந்தனின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமானது. மைம் கோபி மூலம் நிலத்தை அடைய திட்டம் தீட்டுகிறார் அமைச்சர். இதில் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. நட்புக்கிடையே விரிசலை உண்டுபண்ணும் மைம் கோபி போட்ட திட்டம் பலித்ததா? இதில் சூரியின் பங்கு என்ன? நண்பர்கள் என்ன ஆனார்கள்? கோயில் நிலம் என்ன ஆனது என்பதுதான் கருடன் படத்தின் கதை.
கதையாக பார்த்தால் பழக்கப்பட்ட கதைதான். திரைக்கதையும் கிட்டத்தட்ட யூகிக்க கூடிய ஒன்றுதான். ஆனாலும் படத்தை ரசிக்க வைப்பது நடிகர்களின் நடிப்பு. குறிப்பாக சூரி. நகைச்சுவை நடிகராக இருக்கும்போதே நமக்கு கோபம் வரமாதிரி காமெடி பண்ணும் சூரியா இது என்று கேட்க வைக்கிறார். ஆரம்பத்தில் அப்பாவியாக வரும் சூரி இடைவேளை காட்சியில் மிரட்டியுள்ளார். அதுவும் கிளைமாக்ஸ் அசத்தல். சூரியின் வளர்ச்சிக்கு உதவியாக இப்படத்தில் நடித்துக் கொடுத்த சசிகுமாருக்கு வாழ்த்துகள். அவரது காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன. ஷிவதாவின் நடிப்பு நன்று. உன்னி முகுந்தன் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் வலுவாக எழுதியிருக்கலாம். அவரது மலையாள தமிழ் சற்று நெருடலாக இருந்தாலும் நடிப்பில் குறையில்லை. மற்றபடி மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்டோரின் நடிப்பு படத்திற்கு பலம்.
வழக்கமான யூகிக்க கூடிய கதையாக இருந்தாலும் தொய்வில்லாமல் செல்லும் திரைக்கதை படத்திற்கு பலம். நட்பு, பாசம், பகை, துரோகம், குரோதம் என மண்வாசனையுடன் பக்கா ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள். மண், பொன், பெண் இந்த கருத்தியலில் கதையை பின்னியவிதம் சிறப்பு. யுவனின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் அவரது அப்பாவின் சாரல் அடிக்கிறது. மகன் மீதே வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை. சமீப காலங்களில் வந்த படங்களில் மிக சிறந்த ஒரு மேக்கிங் கொண்ட படமாக வந்து இருக்கிறது கருடன்.
ஆரம்பத்தில் அப்பாவியாக வளம் வரும் சூரி கிளைமாக்ஸ் காட்சியில் மிக ஆக்ரோஷமாக கலக்கி ஆகஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து இருக்கிறார் சூரி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
மொத்தத்தில் கருடன் – உயரம். ரேட்டிங் 4/5