ஹிட் லிஸ்ட் திரைவிமர்சனம்.
நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன் சமுத்திரக்கனி,தாரா ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன்.
இசை: சி. சத்யா
இயக்கம்: சூர்ய கதிர் & கார்த்திகேயன்.
தயாரிப்பு: கே.எஸ். ரவிக்குமார்.
இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின்,உதவி இயக்குனர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி உள்ளனர்.
யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நினைத்து அசைவம் கூட சாப்பிடாமல் ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்ந்து வரும் ஹீரோவின் குடும்பத்தில் உள்ள அம்மாவையும் சகோதரியையும் மாஸ்க் மேன் கடத்திக் கொண்டு செல்கிறான். கடத்தப்பட்ட இருவரையும் வைத்து ஹீரோவை பிளாக்மெயில் செய்து சில கொலைகளை செய்ய வைக்கிறான். அந்த கொலைகளை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். யார் அந்த மாஸ்க் மேன் என்பது கடைசி வரை ட்விஸ்ட்டாக செல்கிறது. ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் கனிஷ்கா, மாஸ்க் மேன் மற்றும் போலீஸார் என இருவரிடமும் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர் தனது அம்மாவையும், சகோதரியையும் மீட்டாரா? இல்லையா? என்பது தான் இந்த ஹிட் லிஸ்ட் படத்தின் கதை.
ஹாலிவுட்டில் சில படங்கள் இதே பேட்டர்னில் வந்துள்ளன,
ஆனால், இங்கே கடைசி வரை மாஸ்க் மேன் யார் என்பது தான் ட்விஸ்ட்டாகவே உள்ளது. அதிகம் படங்களை பார்க்கும் ரசிகர்கள் அந்த ட்விஸ்ட்டை கணிப்பது கொஞ்சம் கடினம் தான் இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். சாதாரண ஆடியன்ஸ்களுக்கு அந்த ட்விஸ்ட் ஒரு சுவாரஸ்யத்தை நிச்சயம் கொடுக்கும்.
விஜய் கனிஷ்கா எனும் பெயருடன் அறிமுகமாகி உள்ள விக்ரமன் மகன் முதல் படத்தில் நடிப்பது போன்று தெரியாத அளவுக்கு இந்த படத்துக்காக நடிப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டு நடித்துள்ள நிலையில், அவரது நடிப்பு பார்க்கும்படியாக உள்ளது. ஆனால், நடிப்பில் இன்னும் கவனம் தேவை.
சரத்குமாரின் தேர்ந்த நடிப்பு தான். கதை, திரைக்கதை என அனைத்துமே சுமாராகவே உள்ள நிலையிலும் தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். முதல் பாதியில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் சரத்குமார் போடும் சண்டை அப்ளாஸ் அள்ளுகிறது. சமுத்திரகனி, கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர்.மற்றும் பாடல்கள் ரொமான்ஸ் இல்லாதது படத்திறக்கு பலம்.