வீராயி மக்கள் – திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு காரணம் உறவுகளின் மையமாக வைத்து வரும் படங்களாக அமையும் ஆகவே ரசிகர்களிடம் இந்த படங்களுக்கு ஒரு தனி வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இந்த வீராயி மக்கள் படத்திற்கு கிடைக்குமா என்று பார்ப்போம்
இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,மாரிமுத்து,தீபா ஷங்கர்,சுரேஷ் நந்தா,ராம செந்தில்,குமாரி ஜெரால்டு மில்டன்,பாண்டி அக்கா மற்றும் பலர் நடிப்பில் தீபன் சக்கரவர்த்தி இசையில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வீராயி மக்கள்
சரிக்கதைக்குள் போகலாம்:
அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரே தெருவில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு, பகை வளர்த்துக் கொண்டும் வாழ்கிறார்கள். இவர்களைப் போல் இவர்களது பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்க, இந்த நிலையை மாற்ற வேல ராமமூர்த்தியின் இளைய மகன் நாயகன் சுரேஷ் நந்தா முயற்சிக்கிறார். அவரது முயற்சியினால் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா?, அவர்கள் பிரிந்தது ஏன்? என்பதை மக்களின் மனதுக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘வீராயி மக்கள்’.
வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் நடித்திருந்தாலும், உடன் பிறந்தவர்களுக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுகிறார்.
வேல ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தாலும் சரி, சொந்தங்களை உதறும் காட்சிகளாக இருந்தாலும் சரி, அத்தனை இடங்களையும் தனது இயல்பான நடிப்பு மூலம் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் இவரது இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக காட்சிகளுக்கு எது தேவையோ அதை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தை அவரே தயாரித்திருந்தாலும், எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அத்தை மகளை பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டு காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்பவர், அண்ணனை காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்கி ஆக்ஷனிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து கதைக்கு ஏற்ற முகம். காதல் காட்சிகளில் நாயகனுக்கு இணையாக நடிப்பில் அசத்துபவர், பாடல் காட்சிகளில் ஜொலிக்கவும் செய்திருக்கிறார்.
அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் ரொம்பவே ஓவராக நடித்திருக்கிறார்.
மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என்று சபதம் ஏற்ற பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார்.
வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்தாலும், மேக்கப் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள், ஊர் மக்களாக வருபவர்களும் மண்ணின் மனிதர்களாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்களில் கிராமத்து மனம் வீசுகிறது. அனைத்து பாடல்களும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் தனது கேமரா மூலம் எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையையும், அம்மக்களின் உணர்வுகளையும் ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா, பிரிந்த உறவுகளை நினைத்து பார்க்க வைத்திருக்கிறார். குடும்பங்கள் என்றால் பிரச்சனைகளும், பிரிவுகளும் இருப்பது சகஜம் என்றாலும், உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது, என்பதை மக்கள் மனங்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
உறவுக்காக ஏங்கும் உடன்பிறந்தவர்களின் சோகத்தை வெளிப்படுத்துவது திரைக்கதைக்கு பலமாக இருந்தாலும், அந்த சோகத்தை கொஞ்சம் அதிகமாக பொழிந்திருப்பது ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. இதுபோன்ற சில சிறு சிறு விசயங்கள் குறையாக இருந்தாலும், உறவுகளின் உண்ணதத்தை உரக்க சொல்லியிருக்கும் விதத்தில் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
மொத்தத்தில், இந்த ‘வீராயி மக்கள்’ – மக்களின் மகராசி
வீராயி மக்கள் – திரைவிமர்சனம்