எமக்குதொழில்ரொமன்ஸ் – திரைப்பட விமர்சனம் – 3./5
Nov 23, 2024Kumaresancinema news, movie reviewLike
நாயகன் அசோக் செல்வன் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்து கொண்டிருக்கும் அவந்திகா மிஸ்ரா மீது காதல் வயப்படுகிறார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அப்பொழுது நாயகன் அசோக் செல்வனை நாயகி அவந்திகா மிஸ்ரா தப்பாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறார். பின்பு இவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை மீண்டும் சேர்வதற்கான எடுக்கும் முயற்சியில் ஏதோ ஒரு பிரச்சனை வந்து வந்து இவர்களை சேர விடாமல் செய்கிறது. இப்படியே இவர்களின் பிரச்சனை நீண்டு கொண்டே போகும் பொழுது இறுதியில் இவர்களை சேரவிடாமல் செய்யும் பிரச்சனைகளை நாயகன் அசோக்செல்வன் தீர்த்தாரா, இல்லையா? அப்படி இவர்களுக்குள் வரும் பிரச்சனைகள் என்ன? இறுதியில் காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை…
கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு டிரெண்ட்டில் உருவான ஒரு திரைப்படமாக இந்த எனக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதாக வேலை வெட்டி இல்லாத ஒரு நாயகன் வேலை செய்யும் நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். நாயகி ஒரு கட்டத்தில் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார் இருவரும் சேரப்போகும் சமயத்தில் அவர்களை சேரவிடாமல் சில பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அதை அவர்கள் எப்படி தீர்த்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்ற அரதபழசான ஒரு கதையை வைத்துக் கொண்டு அதை இக்கால ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன். சுந்தர் சி, கிரேசி மோகன் படப் பாணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் ஏனோ அவர்களின் படங்கள் கொடுத்த இம்பேட்டை இப்படம் கொடுக்க மறுத்து இருக்கிறது. பொதுவாக சுந்தர் சி கிரேசி மோகன் படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அது எந்த காலகட்டத்தில் வெளியானாலும் அந்தந்த காலகட்ட ரசிகர்களை நன்றாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்து கொண்டாடும் படமாகவே அமையும். ஆனால் இந்த படமும் அவர்களின் கதை போக்கையும் திரைக்கதை நுட்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டாலும் திரைக்கதையில் ஏனோ சற்றே பல ஆண்டுகள் பின்தங்கிய டிரெண்டை இப்படம் கடைபிடித்து இருப்பதால் ஆங்காங்கே பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அயர்ச்சியை கொடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு திரைப்படம். அது அந்த சமயத்தில் வெளியாகி இருந்தால் கூட நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். ஆனால் காலம் கடந்து இப்படம் வெளியாகி இருப்பது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருந்தாலும் குடும்பங்களுடன் சென்று எந்த ஒரு லாஜிக்கை பற்றியும் யோசிக்காமல் வெறும் பொழுதுபோக்கை மட்டுமே நினைத்துக் கொண்டு செல்லும் ரசிகர்களுக்கு இந்த படம் சற்று ஆறுதலான படமாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதையை காட்டிலும் இரண்டாம் பாதியில் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டு நல்ல சிரிக்கும்படியான காமெடி காட்சிகள் மூலம் படத்தை கரை சேர்த்து பார்ப்பவர்களுக்கும் நிறைவை கொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளை காட்டிலும் காமெடி காட்சிகளுக்கு நன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் கூட்டமாக சென்று ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.
நாயகன் அசோக் செல்வன் வழக்கம் போல் தனது துருதுருவான நடிப்பை படத்தில் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஈடு கொடுத்து நாயகி அவந்திகா மிஸ்ரா நடித்து வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை வழக்கமான முறையில் செய்து இருக்கிறார். இவர்களுடன் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து படத்தை நகர்த்த நன்றாக முயற்சி செய்திருக்கின்றனர். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அழகம் பெருமாள் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அம்மாவாக வரும் ஊர்வசி வழக்கம் போல் தனது வெகுளியான நடிப்பின் மூலம் பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறார். மாமாவாக வரும் படவா கோபி, டாக்டராக வரும் எம்எஸ் பாஸ்கர் உட்பட பலரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு கூட்டி உள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அதேபோல் காமெடி காட்சிகளிலும் பழைய இளையராஜா மியூசிக்கை பயன்படுத்தி ஆங்காங்கே சிரிக்கவும் வைத்திருக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் குடும்பம் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட காதல் மற்றும் காமெடி காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படம் பழைய டிரெண்டில் காமெடி கலந்த சென்டிமென்ட் காதல் படமாக உருவாகி ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. கதையும் காட்சிகளும் பழையதாக இருந்தாலும் அவை ஓரளவு போரடிக்காமல் அப்படியே நகர்ந்து சென்று நிறைவான காமெடி படமாக முடிந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி லாஜிக்கை மறந்து பொழுதுபோக்கிற்காக மட்டும் வருபவர்களுக்கு இப்படம் நிறைவு கொடுக்கும்.