full screen background image
Search
Wednesday 27 November 2024
  • :
  • :
Latest Update

கமல் எழுதிய கடிதம் 

கமல் எழுதிய கடிதம் 

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோலும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களும் பெண்களுமாக 299 பேர் இணைந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அயராத சிந்தனையின் விளைவாக உருவாக்கி, அமல்படுத்திய நாள்.

அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறையாண்மையின் குறியீடாக, ஜனநாயக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒரு பெரும் நல்நோக்கத்தோடு இணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள்.

ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது, ​​ முன்னுதாரணமில்லாத பெரும் சவால்களை நாடு எதிர்கொண்டிருந்தது. தேசப்பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரத்தால் மனித குல வரலாற்றிலேயே இல்லாதபடி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர நேர்ந்தது. எல்லைப் பகுதிகளில் யுத்தம் அடர்த்தியாயிற்று. புதிதாகப் பிறந்த நாடு, பல்வேறு மொழி பேசுபவர்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களையும், மாறுபட்ட கலாசரங்களோடு வாழ்ந்தவர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டிய பெரும்செயலை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவால் ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக நாடாகச் செயல்பட முடியுமா என்று உலகநாடுகள் ஐயப் பார்வை பார்த்தன.

ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய தேசபக்தர்கள் இதைச் சவாலாகப் பார்க்காமல், வாய்ப்பாகவே அணுகினார்கள். இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் மனப்பூர்வமாகவும் ஒன்றுபட்டும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றில் முதன் முறையாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, உலகுக்கே ஒரு பொருள்பொதிந்த தருணமாகத் திகழ்ந்தது.

இந்தியாவின் புராதனக் கலாசாரம், சுதந்திரப்போரின் குறிக்கோள்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணத்தை அவர்கள் உருவாக்கினர். அது சட்டம் தொடர்பான வெறும் சாசனம் மட்டுமல்ல; பிரஜைகளாக நாம் யார், நாம் எதை விழைகிறோம், ஒவ்வொரு பிரஜையின் உரிமையையும் மரியாதையையும் நாம் எப்படிப் பேணிக்காக்கப்போகிறோம் என்பதற்கான பிரகடனம் அது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பெருமக்கள், ஆள்வதற்கான திட்டவரைவை மட்டும் தரவில்லை; சுதந்திரமான, ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான தீர்க்கதரிசனத்தையும் கொடுத்தனர்.
அரசியல் சாசனத்தின் அந்த மகத்தான வார்த்தைகள் இந்திய வரலாற்றின் பாதையை மாற்றியதோடு நின்றுவிடவில்லை; சுதந்திர இந்தியாவில் இன்று நாம் வாழ்வதற்கும் சுவாசிப்பதற்குமான

அந்த குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இந்தியாவின் வரலாற்றின் போக்கை மாற்றியது மட்டுமல்லாமல், இன்று ஒரு பெருமைமிக்க, சுதந்திரமான இந்தியாவில் நாம் வாழவும் சுவாசிக்கவும் காரணமாக இருக்கிறது; ஜனநாயகப் பாதையை உலகம் பின்பற்றுவதற்கான கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து பிரகாசித்துவருகிறது.

தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், நிலைநிறுத்தவும், இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும், இந்த சாசனத்தை உருவாக்கியவர்களின் எண்ணத்தைப் பெருமைப்படுத்தவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்று அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், இந்த சாசனத்தில் அடங்கியிருக்கும் லட்சியங்களை மனதில் கொள்வோம்; இதை உருவாக்கிய அந்த 299 பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம்.

உங்கள் நான்