full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

31 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியைக் கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களைப் பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைக்கோளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அதிகம் முன் வருகின்றனர். அந்தவகையில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 31 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

கார்ட்டோசாட்– 2இ செயற்கை கோளில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றியுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.