ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதே போல துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைகிறது. புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந்தேதி நடக்கிறது.
துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த நிலையில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை பாரதிய ஜனதா அடுத்த வாரம் அறிவிக்கிறது. பாராளுமன்றத்தில் அனுபவம் பெற்றவரை வேட்பாளராக களம் நிறுத்துவது என்று பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
டெல்லி மேல்-சபையை வழிநடத்தி செல்வதில் சிறந்தவராகவும், அதே நேரத்தில் பாராளுமன்ற அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையிலான நபரை வேட்பாளராக களம் நிறுத்தும் பணியில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 9-ந்தேதி நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த வாரத்தில் பா.ஜனதா வேட்பாளரை அறிவிக்கிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மேல்-சபை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.
பாராளுமன்றத்தின் இரு சபைகளின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது. இரு சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதாவுக்கே கூடுதல் எம்.பி.க்கள் பலம் உள்ளது.
எனவே ஜனாதிபதி தேர்தலைப் போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.