full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி

உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில், பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தபோது, ராம்நாத் கோவிந்த் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ராம்நாத் கோவிந்துக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும், மீராகுமாருக்கு 3 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.

இதையடுத்து, இந்தியாவின் 14-வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.