பெப்சி நாளை முதல் வேலைநிறுத்தம்

News
0
(0)

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ‘பெப்சி’க்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். பயணப்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுபோல் வேறு சில படங்களின் படப்பிடிப்புகளின் போதும் சம்பளப் பிரச்சினை தொடர்பாக பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களும் மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், படப்பிடிப்புகளை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பை நிறுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தனர். வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் கைவிட வேண்டும் என்றும் பெப்சி வற்புறுத்தியது. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் அது ஏற்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஏ.சண்முகம், பொருளாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “பெப்சி தொழிலாளர்களுக்குப் பேசி முடிக்கப்படாத சம்பளம் மற்றும் பொதுவிதிகளை உடனடியாக பேசி முடித்து புத்தகம் அச்சிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம். 2, 3 மாதங்களாக இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நிலையாகவே நீடித்து வந்தது.

இதனால் படப்பிடிப்புகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பொதுவிதிகளை முடிக்காவிட்டால் பணிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்து வந்தோம்.

இதற்கிடையே மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பு பயணப்படி சம்பளப் பிரச்சினை காரணமாக நின்று போனது. இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

இதனால் பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர்.

நடந்த சம்பவத்துக்கு பெப்சி டெக்னீசியன் யூனியன் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சம்பள ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகாதது தான் இதுபோன்ற சிக்கல்களுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சமாதானமாக போவதற்கே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறது. எனவே வேறு வழி இல்லாமல் பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பெப்சி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். ஏற்கனவே கூறியபடி, பொதுவிதிகளை நாளைக்குள் (இன்று) பேசி முடித்து கையெழுத்திட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 1-ந் தேதி முதல் (நாளை) பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். 25 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த வேலைநிறுத்தம் தொடரும்.

தற்போது ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்ளிட்ட பலர் நடிக்கும் 35 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் யாரும் 1-ந் தேதி முதல் கலந்துகொள்ள மாட்டார்கள்.” என்று கூறினார்.

பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.