“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை நடிகர் ஆரியின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில் “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பினை முன்னெடுத்து சத்யபாமா யுனிவர்சிட்டி பெருமையுடன் வழங்க, ட்ரான்ஸ் இந்தியா மீடியா பிரைவேட் லிமிடெட், வாவ் செலிபிரேசன்ஸ் உடன் இணைந்து, 2683 மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து 5366 நாட்டு கத்தரி விதைகள் விதைத்து சீனாவின் முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்தனர். இச்சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை தமிழனாய், இந்தியனாய் நாம் பெருமை கொள்கிறோம்.
இந்த உலகச் சாதனையை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக நடிகர் ஆரியின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பாக “கின்னஸ் சான்றிதழ் விழா” ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை அன்று திரு. உ. சகாயம் IAS, அவர்களின் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இவ்விழாவில் பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை வழங்க கின்னஸ் சாதனைக்கான களத்தின் காணொளி திரையிடப்பட்டு டாக்டர். கு. சிவராமன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆரி, மரியாசீனா ஜான்சன், ராஜேந்திர எம் ராஜன் மற்றும் முகமது இப்ராகிம் ஆகியோருக்கு சகாயம் IAS, தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன், இயக்குநர் அமீர் ஆகியோரால் பெருமையுடன் வழங்கி கௌரவிக்கப்பட்டது விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது.
மேலும் இச்சாதனை படைக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கு பங்களிப்பு சான்றிதழினை “பாலம்” கல்யாண சுந்தரம், நீயா நானா ஆண்டனி, டாக்டர் ஸ்ரீமதி கேசன், டாக்டர் வசந்தமணி, விமலா பிரிட்டோ, நல்லோர் வட்டம் திரு. பாலு ஆகியோரால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது,
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு சமுதாயத்தின் உணவு வியாபார சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலை தமிழ் மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டி வெள்ளித்திரையில் சமூக மாற்றத்திற்கான விதையை விதைத்து மாபெரும் வெற்றி கண்ட “வேலைக்காரன்” திரைப்பட குழுவினருக்கு “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளையின் சார்பாக சகாயம் IAS உடன் மரியாசீனா ஜான்சன், ராஜேந்திர எம் ராஜன் அவர்களால் நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது.
இவ்விழாவின் விருந்தோம்பலில் நெகிழி (PLASTIC) பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பது சிறப்பான அம்சமாகும். மேலும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பாரம்பரிய விவசாயத்தை போற்றும் விதமாக “ஏர் கலப்பை” மாதிரி நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டு விழா நிறைவுற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழரின் பாரம்பரிய உணவு முறையை நினைவுபடுத்தும் விதமாக சிறுதானிய உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டது. இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.