புகைப்பட கலைஞராக இருக்கும் நாயகன் சக்தி சிவன், நாயகி அனுவை காதலித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் ஊரில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் 4 பேர், பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். தொலைந்து போகும் பெண்களை பற்றி போலீசில் புகாரும் வருகிறது. பெண்கள் வீடு திரும்பிய பிறகு அவமானம் என்று கருதி புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், நாயகி அனுவை கடத்து கிறார்கள். இதையறிந்த சக்தி சிவன் போலீசாக இருக்கும் லொள்ளுசபா ஜீவாவிடம் சொல்லுகிறார். அவர் இது போன்று புகார்கள் நிறைய வந்து வாபஸ் பெற்றிருக்கிறது என்று கூறுகிறார். இதை கேட்ட சக்தி சிவனிடம் ஜீவாவிடம் அந்த கேஸ் பற்றிய விவரங்களை பெற்றுக் கொண்டு அனுவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
இறுதியில் நாயகியை அனுவை நாயகன் சக்தி சிவன் காப்பாற்றினாரா? ஊரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சக்தி சிவன், பெரிய குறை சொல்லாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்யும் படங்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தாலும் இப்படம் கொஞ்சம் வேறுபட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். ஆனால், லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
நாயகியாக வரும் அனு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். போலீசாக வரும் ஜீவாவிற்கு அதிகம் வேலையில்லை. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் மைம் கோபி.
கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. சுரேஷ் குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ஆட்கள் தேவை’ சுவாரஸ்யம் குறைவு.