full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை சரிவர செய்யாததால் தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம் – நடிகர் ஆரி ஆவேச பேச்சு!

“தோனி கபடி குழு” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘ தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டை படமாக உருவாக்கி அதை இன்று மேடையேற்றியிருக்கும் படக்குழுவினருக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். அப்புக்குட்டி கூறினார், ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று. படக்குழுவினர் ‘குடி’யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமாகத்தான் உள்ளது.

தமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்கள், இடையூறுகள், தடைகள், மன உளைச்சல்கள் போன்றவை இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஐயப்பனிடம் அவை எதுவும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசியதிலிருந்து இப்படம் எந்தளவுக்கு தரத்தோடு இருக்கும் என்பதை உணர முடிகிறது. இப்படத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது சாதாரண செயல் அல்ல.

அபிலாஷ் நடிகரைத் தாண்டி கூடிய விரைவில் இயக்குநராகி விடுவார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. தன்னைக் கூட பார்த்துக் கொள்ள நேரமில்லாமல் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தமிழ் சினிமா உங்களுக்கென்று ஒரு இடத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

‘இரட்டைச்சுழி’ படத்திலிருந்தே லீமாவைத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். சினிமா பின்னணியில்லாத ஒரு பெண் இன்று கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முகமது இஷாக், சிறிய படங்களை எடுத்து அதை வெளியிடுவதற்கான பிரச்னைகளை சந்திக்கும் பட்சத்தில் நான் அவர்களுக்கு உதவுகிறேன் என்று கூறினார். அப்படி யாராவது தரமான படங்கள் எடுத்து பிரச்னைகளோடு இருந்தால் இஷாக்கை அணு​
​கலாம்.

ஏனென்றால், இந்த படமும் வெளியாவது அவ்வளவு எளிதல்ல. வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில் எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அது ‘சர்காரில்’ ஆரம்பித்து ‘தோனி கபடி குழு’ வரையில் பிரச்னை இருக்கத்தான் போகிறது.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தன்னுடைய படங்கள் தான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பெரிய படம் வந்ததால் சிறிய படங்கள் ஓடவில்லை என்று இன்று கூட செய்திகள் வந்தது. EC உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.

சினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும். ‘அமேசான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’ வந்துவிட்டது.

இதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவில்லையென்றால் மொத்த திரையரங்கங்களையும் இழுத்துமூட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ரூ.500 கட்டினால் போதும் ஆன்லைனில் உலக சினிமா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். திரையரங்கத்திற்கு யாரும் வரமாட்டார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட ‘ஆப்(app)‘ செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு தேவையான போது பார்த்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலையும் வந்துவிட்டது.

சினிமாவை இப்போது காப்பாற்றவில்லையென்றால், சினிமாவும் அதை சார்ந்தோர்களும் முடங்கிப் போகும் வாய்ப்பு அதிகம்.

என்னுடைய இயக்குநர் தாமிரா கடன் வாங்காமல் படம் எடுத்து இன்று பல கோடி ரூபாய்க்கு கடனாளியாக அவதிப்படுகிறார். இதை மேலும் தடுக்க, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு NOC கொடுக்கலாமா? வேண்டாமா? என்று அதைச் சார்ந்த சங்கங்கள் தீர்மானங்கள் கொண்டு வந்து அதை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வழி காட்டினால் பல தயாரிப்பாளர்களின் தற்கொலைகள் தடுக்கப்படும். படத்தைச் சார்ந்தோர்களும் வறுமையில் வாடாமல் தடுக்க முடியும்.

எங்களுக்கு இருக்கும் பணப் பிரச்னைகளை சரிசெய்தால் தான் நாங்கள் உங்கள் படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுவதும் தடுக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்திடம் படத்தை வெளியிட மறுதேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. விநியோகதஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்ற அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட்டு சினிமாவைக் காப்பாற்றாமல் விட்டால், தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக வேறொருவர் கையில் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுவோம்.

‘வெப் சீரிஸ்’ (Web series) வந்துவிட்டது. எல்லோரும் பிழைப்பிற்காக அங்கு சென்று விடுவார்கள். ஒரு காணொளியை எத்தனை பேர் எத்தனை விநாடிகள் பார்க்கின்றனர் என்பது முதற்கொண்டு தெளிவாக கூறிவிடுகிறார்கள். ஆனால் திரையரங்கத்தில் 4 காட்சிகள் சிறிய படங்களுக்குக் கொடுப்பதில்லை. காலை காட்சிகள் போட்டுவிட்டு, சிறிய படத் தயாரிப்பாளர்களைத் தவிக்க விடுகிறார்கள். மாலை மற்றும் இரவு காட்சிகளை சிறிய படங்களுக்கு கொடுங்கள்.

பண்டிகை நாட்களில் சிறிய படங்களை வெளியிடுங்கள். பெரிய படங்களை எப்போது போட்டாலும் மக்கள் பார்ப்பார்கள். அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டிற்கு ரூ.30 என்றால் 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.150 என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் பதிவு செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ.4,50,000 திரையரங்க உரிமையாளர்களுக்குச் செல்கிறது. திரையரங்கத்திற்கு வருபவர்களைக் குறைப்பது திரையரங்க உரிமையாளர்களான நீங்கள் தான்.

இக்கட்டணத்தை எத்தனை நபருக்கு பதிவு செய்தாலும் ஒரு முறை பதிவு செய்ய ரூ.30 தான் வசூலிக்க வேண்டும் என்று தற்போது இருக்கும் முறையை மாற்றி மறுபரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் தின்பண்டங்களின் விலைகளையும் குறைக்க வேண்டும். இல்லையென்றால், நாளை யாரும் திரையரங்கத்திற்கு வரமாட்டார்கள். அரங்கத்தை இழுத்துமூட வேண்டிய சூழல்தான் ஏற்படும். இதுபற்றி சென்ற வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

தற்போது நாம் கவனிக்க வேண்டியது ‘டெல்டா’ மக்களைத்தான். அபிலாஷ் கூறியதுபோல் நான் நிவாரணத்தைப் பாதியில் விட்டுவிட்டு வரவில்லை. அங்கு வேலைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதுசார்ந்த வேலைகள் இங்கும் இருப்பதால் அதை முடித்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் செல்வேன். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.இன்று எழுந்த மாதிரி கஜா புயல் வந்த அன்றே மொத்த தமிழகமும் எழுந்து நின்றிருந்தால் அந்த விவசாயி இறந்திருக்கமாட்டார். அதுதான் உண்மை. சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும் தான் மொத்த தமிழ்நாடும் கொந்தளிக்கிறது. எங்கிருந்தெல்லாமோ உடனே நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், அதேச் சென்னையைத் தாண்டி ஒன்று நடந்தால் நாம் குரல் கொடுப்பதில்லை என்பதே உண்மையான விஷயம்.

அங்கு சென்று பார்க்கும்போது தான் தெரிந்தது, மக்கள் எவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று. நாங்கள் நான்கு நாட்கள் அப்பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கியுள்ளனர். எங்களையெல்லாம் பிச்சைக்காரர்களாகத்தான் வைத்திருப்பீர்களா? இதுவரை பள்ளிகளில் தங்கினோம். நாளை பள்ளி திறந்துவிடும். முகாமில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்கிறார்கள்.

இந்த நாட்டில் சிலை வைப்பது, அதற்கு செலவு செய்வது மற்றும் கோயில் கட்டுவதைப் பற்றி பேசுகிறோம். ஆனால், யாராவது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்று பேசுகிறோமோ? அங்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் யாராவது உங்களிடம் பூச்சிமருந்து போன்ற பாட்டில்கள் கேட்டால் கொடுத்துவிடாதீர்கள். உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த சூழலில் அவர்கள் எதற்காக வாங்குகிறார்கள் என்பது தெரியாது. எங்கள் அப்பாவிற்கு நேர்ந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது மற்றும் எங்களுக்கு நிதியுதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கை வார்த்தை போதும் என்று கூறினார். நானும் எனது சகோதரியும் பட்டப்படிப்பு படித்திருக்கிறோம். எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள். நாங்கள் பிழைத்துக் கொள்வோம். 400 தென்னை மரங்கள், 100 தேக்கு மரங்கள் மடிந்து விட்டன. அதைச் சுற்றி வந்து அந்த கவலையிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார்.

அதேபோல், இன்று இறந்தவரும் தேக்குமரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பிள்ளைகளை வைத்துக் கொண்டு இனி நான் என்ன செய்வேன்? 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டேன். அவர் மட்டும் ‘டெல்டா’ பகுதிகள் முழுவதுமே 30 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டன.

இங்குள்ளவர்களெல்லாம் அங்கு என்ன நேர்ந்தால் என்ன? நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஜனவரி வந்தால் தேங்காய் ரூ.400 க்கு விற்கப்படும். தென்னையைப் பற்றி யாருக்கும் சரியான புரிதல் இல்லை. தேங்காவிலிருந்து தான் ‘லாரிக் அமிலம்’ எடுக்கிறார்கள். அதிலிருந்து இதயத்திற்கு மருந்து தயாரிக்கிறார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். அதற்கான மருந்து விலைகள் உயரும். காய்கறி விலை உயரும்.

இதுமட்டுமில்லை. இன்னும் 15 வருடங்களில் நாம் எல்லோரும் கொத்துக் கொத்தாக சாகப்போகிறோம் என்று என்னிடம் ஒருவர் கூறினார். எப்படி? என்று கேட்டதற்கு, பிச்சாவரம் பகுதியில் இருந்த 4,500 ஏக்கர் நிலப்பரப்பு காணாமல் போய்விட்டது யாருக்காவது தெரியுமா? அதேபோல், இராமேஸ்வரத்தில் ஒரு கிராமமே உள்ளே போய்விட்டது யாருக்காவது தெரியுமா? என்றும் கேட்டார்.

இயற்கையைச் சுரண்டி, இயற்கை அழித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதில் விவசாயி ஒருவர், மண்ணை சுரண்டி வாழ்பவன் வாழ்கிறான், மலையைச் சுரண்டி வாழ்பவன் வாழ்கிறான், கிரானைட்டை சுரண்டி வாழ்பவன் வாழ்கிறான், அதேபோல் மண்ணைக் குடைந்து வாழ்பவனும் வாழ்கிறான், ஆனால் இந்த மண்ணை நம்பி வாழும் விவசாயிகளால் வாழ முடியவில்லை என்று கூறிகிறார்.

இவற்றையெல்லாம் கூறினால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியல் பேசுகிறார்கள்? என்று கூறுகின்றனர். நாங்கள் அரசியல் பேசவில்லை. அரசியல்வாதிகள் தங்களது கடமைகளை சரிவர செய்திருந்தால், எங்களுக்கு வேலையே இருந்திருக்காது என்பதை திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னும் உள்புற கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. 3 மாவட்டங்கள் அழிந்து போய் இருக்கின்றன. நமக்கு பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு குரல் கொடுக்காமல் வேடிக்கைப் பார்த்தால் நாளை நாமும் பாதிக்கப்படுவோம். தேசியப் பேரிடரை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒவ்வொரு முகாமிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்கான கட்டத்திற்கு தள்ளபட்டுள்ளோம்.

அங்கிருந்து நிதியுதவி அளித்துவிட்டால் மட்டும் போதுமா? திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் நேரில் வரவில்லையே. ஏன்? என்ற கேள்வி எழுப்புகிறார்கள். அரசியல்வாதிகளும் தங்களது ஈகோவை மறந்துவிட்டு டெல்டாவை கட்டமைக்கவில்லையென்றால், விவசாயிகள் தற்கொலை நோக்கிச் சென்று கொண்டேதான் இருப்பார்கள். உங்களுக்கும் உங்கள் தலைமுறைகளுக்கு கலாச்சாரமான தரமான உணவுகள் கிடைக்காது.

உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி படிப்பது? எப்படி சம்பாதிப்பது? என்று கற்றுக் கொடுங்கள். இயற்கை பாதிக்காத வகையில் எப்படி வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுங்கள். இங்கிலாந்திலிருந்து ஒருவர் புதுச்சேரியில் விவசாயம் செய்து பாரம்பரிய உணவகம் நடத்தி வருகிறார். இங்கிலாந்தில் கால்பந்து, மது மட்டும்தான். ஆனால் இந்தியாவில், உணவுக்கு கலாச்சாரம் இருக்கிறது என்கிறார்.

ஆகையால், ‘கஜா’ புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.