full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆதரவற்ற மாணவிகளுக்கு மரகத நாணயம் வழங்கிய ஆனந்தராஜ்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை, நடிகர் ஆனந்தராஜ் ‘மரகத நாணயம்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி பேண்டசி படம் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால், சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை, ‘மரகத நாணயம்’ படத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் அழைத்துச் சென்றார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ‘மரகத நாணயம்’ படத்தைப் பார்த்த மாணவிகள், சிரித்து மகிழ்ந்தனர்.

நடிகர் ஆனந்தராஜ் தனது குடும்பத்தாருடன் மாணவிகளுடன் சேர்ந்து படம் பார்த்தார். படத்தின் இயக்குநர் சரவண் உடன் இருந்தார்.

நிருபர்களிடம் பேசிய ஆனந்தராஜ், “‘மரகத நாணயம்’ படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக உருவாகியுள்ளது. இதுபோன்ற படங்களை ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே கொடுப்பார்கள். அந்த பட்டியலில் அறிமுக இயக்குநர் சரவண் இணைந்துள்ளார். பெண்கள், சிறுவர்கள் இந்த படத்தைப் பார்த்து சிரித்து மகிழ்வதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. புனித ரம்ஜான் பண்டிகையைத் தொடர்ந்து, கில்ட் ஆப் சர்வீஸ் ஆசிரம மாணவிகளை சந்தோஷப்படுத்த, கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ‘மரகத நாணயம்’ படத்தைப் பார்க்க அழைத்து வந்திருக்கிறேன்.” என்றார்.

இயக்குநர் சரவண் பேசுகையில், “சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் படம் பார்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் இந்த படத்தை இயக்கினேன். தற்போது குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனந்தராஜ் சாருடன், மாணவிகளுடனும் சேர்ந்து படம் பார்ப்பதில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.