நடிகர் பிருதிவிராஜ் நடித்து தயாரிக்க உள்ள புதிய படம் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது.
கொரோனாவால் திரைப்படங்களின் தொழில்நுட்பம் மாறத்தொடங்கி உள்ளது. கருப்பு வெள்ளை காலத்தில் படப்பிடிப்புகளை ஸ்டுடியோவுக்குள் நடத்தினர். ஒருவரே இருவேடங்களில் வந்தது ஆச்சரியப்படுத்தியது. அதன்பிறகு கிராபிக் மாயாஜாலம், 3டி படங்கள் வந்தன. இப்போது விர்ச்சுவல் என்ற மெய்நிகர் தயாரிப்பு தொழில் நுட்பத்தை முதன் முதலாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடைமுறைக்கு கொண்டு வருகிறார்.
அவர் கதாநாயகனாக நடித்து தயாரிக்க உள்ள புதிய படம் இந்த தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது. கோகுல்ராஜ் இயக்குகிறார் கிரீன் மேட் எனப்படும் திரைகளுக்கு முன்னால் காட்சிகளை எடுத்து கம்ப்யூட்டர் மூலம் நிஜமான லொக்கேஷனுடன் இணைத்து விடுவார்கள். இப்போது சில காட்சிகளை இப்படித்தான் எடுக்கின்றனர். ஆனால் முழு படத்தையும் இந்த தொழில்நுட்பத்தில் பிருதிவிராஜ் எடுக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலில் நடிகர் நடிகைகள் வெளியே போக தேவை இல்லை. ஸ்டுடியோவுக்கு உள்ளேயே முழுபடத்தையும் எடுத்து விடலாம். ஏற்கனவே ஹாலிவுட்டில் இந்த தொழில்நுட்பத்தில் அவதார், லயன்கிங் உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் என்ற பெயரை பிருதிவிராஜ் படம் பெறுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகிறது. படபிடிப்பில் இது ஒரு புதிய அத்தியாயம் என்றார் பிருதிவிராஜ்.