full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
 
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் -ல் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
 
 
 நடிகர் R.பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு  சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.
 
 
படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும் , படத்தின் நாயகன் விஷால்  மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து  நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார்.
 
 
ஏற்கனவே இந்த படத்திற்காக  விஷால் தனது  கடும் முயற்சியினால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில்  இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது