ரமீஸ் ராஜா தனது ரைட் மீடியா ஓர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மூலம் ‘டார்லிங் -2’ படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்ற புதுமுக இயக்குனரை இயக்க வைத்து தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஹாரர் படமாக உருவாகிய இந்தப் படத்தில் இவருடன் இணைந்து கலையரசன், முனீஸ், காளிவெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன் ஆகியோருடன் மாயா என்ற புதுமுக நாயகி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த முதல் படத்திலேயே ரமீஸ் ராஜா பயந்த சுபாவம், முரட்டு குணம் கொண்ட இருமாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா வெளியிட்டிருந்தார். முதல் படமே ரமீஸ் ராஜாவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய பாலாஜியின் இயக்கத்தில் ‘விதி-மதி உல்ட்டா’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார் ரமீஸ் ராஜா. இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜியை புதிய இயக்குனராக தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதில் இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோருடன் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். கானா பாலா மற்றொரு பாடலையும், சித்ஸ்ரீராம், சின்மயி ஆகியோர் வேறொரு பாடலையும் பாடியிருக்கிறார்கள்.
கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸ் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைந்திருக்கிறார்கள். இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். தாதாவிடம் மோதும் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடித்திருக்கிறார். இந்தப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கிறது.
ரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்கும் 3வது படமாக மர்டர் மிஸ்ட்ரி கதையமைப்புக் கொண்ட படம் உருவாகி வருகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகையர்கள், பணியாற்றவிருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான டைட்டிலும், பர்ஸ்ட்லுக் போஸ்டரும் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகன் ரமீஸ் ராஜா.