2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார்.
“லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.
‘அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.
ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருக்கும் ‘தி லயன் கிங்’ கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான ஸ்கார் வேறு சில திட்டங்களைக் கொண்டுள்ளார். பிரைட் ராக் (Pride rock) போரானது துரோகம், சோகம் மற்றும் ட்ராமாவை கொண்டிருக்கிறது, இதன் விளைவாக சிம்பா நாடுகடத்தப்படுகிறது. புதிதாக வந்த நண்பர்களின் உதவியுடன், சிம்பா வளர்ந்து எவ்வாறு தனது உரிமையை கைப்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது.
சிம்பாவாக டொனால்ட் குளோவர், நாலாவாக பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர், முஃபாசாவாக ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ஸ்காராக சிவெட்டல் எஜியோஃபர், பம்பாவாக சேத் ரோஜென் மற்றும் டிமோனாக பில்லி ஐச்னர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது நட்சத்திர குழு. பொக்கிஷமான கதாபாத்திரங்களை ஒரு புதிய வழியில், முன்னோடி திரைப்பட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்பித்திருக்கும், டிஸ்னியின் “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.