ஐந்தாண்டுகளுக்கு முன்னாலான பிரச்சினையால் இப்போது நடிகர் சிம்புவுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி “அரசன்” என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, ரூபாய் ரூ.50 லட்சத்தை முன் பணமாக வாங்கி இருக்கிறார் சிம்பு. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்திருக்கிறார். சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொறுமை இழந்த தயாரிப்பு நிறுவனம், சிம்புவிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.கோவிந்தராஜ் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு,
“நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை, ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டிஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும்” என்று தீர்ப்பளித்தார்.
மேலும் “சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக சிம்பு தரப்பில் வாதிடுகையில், “குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை” என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.