நடிகர் விஷாலின், “விஷால் பிலிம் பேக்டரி” மற்றும் “பென் ஸ்டுடியோஸ்” இணைந்து தயாரித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் இறுதியாக எடுத்து முடிக்கப்பட்டவை. இந்நிலையில் படம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஷால்.
அதில், “சண்டக்கோழி 2” படத்தின் முதல் தனிப்பாடலை (Single Track) வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
விஷாலின் 25-ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை, “லைகா புரொடக்ஷன்ஸ்” வெளியிடுகிறது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக இந்தப் படம் ரிலீஸாகிறது.