பொன் விழாவில் ஒன்று கூடும் நடிகர்கள், நடிகைகள்

News

ஸ்டண்ட் யூனியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது தலைவர் அனல் அரசு பேசும்போது, ‘சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத்தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம் திரைக்கு வருகிறது. அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன், பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

இன்று எங்களோடு இல்லா விட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் 50தை கடந்திருக்கிறோம். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பொன்விழாவை ஆகஸ்ட் 26ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்.

நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம். எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம். விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப்படுத்த உள்ளோம். சுமார் 6 மணி நேரம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் நடை பெறும். கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த ஷோ இயக்குனராக மானாட மயிலாட புகழ் கோகுல் நாத் இருக்கிறார். பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் சார் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை. இவ்வாறு ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு தெரிவித்தார்.

அவருடன் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜான் மற்றும் இணை செயலாளர் ஆர்.நாராயணன் துணை செயலாளர் பரமசிவம் துணைத்தலைவர் ராக்கி ராஜேஷ் உபதலைவர் கே.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பத்திரிக்கயாளர் சந்திப்பில் ஏராளமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.