full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர்கள்.

1996ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு கருத்தைச் சொல்ல, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றார். அப்போதிலிருந்து இன்று வரை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளிவருகிற காலகட்டத்திலும், அவரது “ஆண்டவன் நினைத்தால்” அறிக்கையிலும் இம்மியளவு கூட மாற்றம் ஏற்படவே இல்லை. கடந்த 21 ஆண்டுகளாக அவரது அரசியல் பிரவேச அறிக்கைகளுக்கு ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகான ரசிகர்கள் சந்திப்பிலாவது முடிவுரை எழுதுவார் என்று பார்த்தால், ”சிஸ்டம் சரியில்லை” “போர் வரும்போது” என்று எக்ஸ்ட்ராவாக சில வார்த்தைகளை மட்டும் சேர்த்துப் பேசி ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு அதே பழைய ”ஆண்டவன் நினைத்தால்” வசனங்களை கொஞ்சம் கூட மாற்றாமல் சொல்லிவிட்டு “2.0”, “காலா” என பிஸியானார்.

அடுத்தது உலக நாயகன்.. ரஜினி ஒரு பக்கம் இந்தா வரேன், அந்தா வரப்போறேன் என்று என்னேரமும் ட்ரெண்டிங்கிலேயே இருக்க.. அதை உடைத்துக் கொண்டு லைம்லைட்டுக்கு வந்தார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிறுநெருப்பைப் பற்ற வைத்து, ட்விட்டரில் அந்த நெருப்பை ஊதி ஊதி பெரிதாகினார். கமலுக்கிருக்கிற பகுத்தறிவுவாதி, இடதுசாரி சிந்தனையாளர் பிம்பத்தை வைத்துக்கொண்டு சுழற்றியடித்தார். இடையில், இடதின் பக்கத்திலிருந்து வலதின் பக்கம் சாய்வேன் என்று சொல்லி கலங்க வைத்தார். தமிழக அரசை மட்டுமே குறைசொல்லி விமர்சித்த கமல், மத்திய அரசின் குறைபாடுகளை மௌனமாக கடந்து போனார். முரசொலி பவளவிழாவில் ரஜினி கீழ்வரிசையில் அமர்ந்திருக்கையில், மேடையிலிருந்த கமல் பேசிய “பயத்தை விட சுயமரியாதையே முக்கியம்” என்ற பேச்சு பொறி கிளப்பியது அரசியல் அரங்கில். நாளொரு பிரச்சனை பொழுதொரு விமர்சனம் என்று ட்விட்டரில் களமாடிய கமல், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ஆளும் தரப்பினருக்கு எரிச்சலூட்டினார்.. இதோ இப்போது “நவம்பர் 7ல் அறிவிப்பு” என்று கம்பீரம் காட்டிவிட்டு, “சும்மா வழக்கமான ரசிகர் சந்திப்புதான்” என்று அவரே பற்றவும் வைத்து அவரே தண்ணீர் ஊற்றும் ரஜினியின் தந்திரத்தையே கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர்போடும் செந்தமிழ் ட்வீட்டுகளைப் புரிந்துகொள்ளவே யுகம் தேவைப்படும் இந்த பாமர மக்களிடமிருந்து கமலை அந்நியமாக வைத்திருப்பதும் அவரது குழப்படியான பேச்சுதான் என்பதை அவர் உணர்ந்தால் மக்களுக்கும் நல்லது.. கமலுக்கும் நல்லது. ஒருநாள் முதல்வர் போல, ஒரு நாள் எண்ணூர் விசிட்டில் ஸ்கோர் செய்வதெல்லாம் வேறு எந்த பிறவி அரசியல்வாதிக்கும் கைவந்திடாத ஒரு கலை.

இந்த அரசியல் சதுரங்கத்தில் சமீபமாய் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் ஆசை அவருக்குள் இருப்பது உண்மைதான் என்றாலும், அதை சோதிப்பதற்கான தவறான காலகட்டமாகிப் போனதில் உண்மையிலேயே மிகவும் தர்மசங்கடமான சூழலில் தவிக்கிறார் விஜய். ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மற்றி வைத்திருந்தாலும், அதை மட்டுமே நம்பிக்கொண்டு அரசியலுக்கு வரும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா? என்பதே தற்போதைய கேள்வி. 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு தனது “விஜய் மக்கள் இயக்கமும்” ஒரு சிறிய காரணம் என்று கூறிக்கொண்ட விஜயின் படங்களுக்கு, அதே ஆட்சியால் ஏற்பட்ட இடைஞ்சல்கள் நாம் எல்லோரும் அறிந்ததே. இப்போதும் அதேபோலான சிக்கல்தான் என்று கடந்து போக முடியாத அளவிற்கு இந்திய அளவில் விவாதமான விஜயின் மெர்சல் படம் தந்த பாடத்திலிலிருந்து, அரசியலே தீர்வு என்று அவர் முடிவெடுத்திருந்தால் ரஜினி – கமலைத் தாண்டி வரவேண்டிய தர்மசங்கடமான முடிவை விஜய் எடுத்தே ஆகவெண்டும். ஒருவேளை ரஜினியும் கமலும் களத்திற்கு வந்துவிடும் பட்சத்தில் விஜயின் அரசியல் கனவை பல ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடும் நிலைமை ஏற்படலாம்.

ஆனால் ஒன்று, ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி, விஜயாக இருந்தாலும் சரி இம்மூவரில் யார் முதலில் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.. இதற்கு முன் சினிமாவில் இருந்து போய் அரசியல் செய்தவர்களாகட்டும், வென்று ஆண்டவர்களாகட்டும் யாருமே சினிமாவில் இருந்து நேரடியாக அந்த இடத்தை அடைந்துவிடவில்லை. அவர்கள் எல்லோரும் ஆற்றிய களப்பணி என்பதில் எத்தனை சதவீதம் நாமெல்லாம் செயலாற்றியிருக்கிறோம் என்பதை ஒருகணம் சிந்தித்துக் கொள்ளுதல் நலம். சினிமாவிலிருந்து நேரடியாக முதல்வர்தான் என்று இவர்கள் போடும் கணக்குப்படி பார்த்தால், இது தமிழக அரசியலின் போதாத காலம்தானே??