பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி இன்று நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
கொரோனா தொற்றினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி தான். தற்போது அவர் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு இருப்பதை நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அந்த கலைஞன் மீண்டு வர நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலை ஒலிக்க விட்டு இந்த ஒரு நிமிட மவுன பிரார்த்தனையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம்” என்று கூறியுள்ளார். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.