நடிகை கங்கனா ரணாவத்துக்கு 24 மணி நேரமும் கமாண்டோ பாதுகாப்பு.அளித்துள்ள மத்திய அரசு

News
0
(0)

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், தமிழில் ‘தாம் தூம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது, ‘குயின்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் இமாசலபிரதேசத்தை சேர்ந்தவர்.நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மும்பை நகரம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். பாலிவுட்டில் போதை மருந்து பழக்கம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.அதற்கு இமாசலபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ராம் கடம் என்பவர், இந்தி படவுலகின் போதை மருந்து பழக்கத்தை அம்பலப்படுத்தி இருப்பதால், கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மராட்டிய மாநில அரசை கேட்டுக்கொண்டார்.

அதற்கு கங்கனா தனது டுவிட்டர் பதிவில், சினிமாவில் வரும் மாபியாவை விட மும்பை போலீசை பார்த்து பயப்படுவதாகவும், மத்திய அரசோ அல்லது இமாசலபிரதேச போலீசோ பாதுகாப்பு அளித்தால் போதும் என்றும் தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத், “அப்படியானால் மும்பைக்கே வராதீர்கள். உங்கள் கருத்து மும்பை போலீசை இழிவுபடுத்துவதாக இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு கங்கனா ரணாவத், “மும்பையில் இருப்பவர்கள், ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்?. சஞ்சய் ரவத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.உடனே, சஞ்சய் ரவத், “முதலில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் போய் பாருங்கள். மும்பை போலீசை இழிவுபடுத்தியதற்கு கங்கனா மன்னிப்பு கேட்டால், நானும் மன்னிப்பு கேட்பது பற்றி பரிசீலிக்கிறேன்” என்று கூறினார்.சிவசேனா எம்.எல்ஏ. பிரதாப் சரானிக், “மும்பைக்கு வந்தால் கங்கனா மீது தேசஅவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்று மிரட்டல் விடுத்தார். அதற்கு கங்கனா, “9-ந்தேதி (நாளை) மும்பைக்கு வருகிறேன். முடிந்தால் தடுத்து பாருங்கள்” என்று சவால் விடுத்தார்.இந்த வார்த்தை மோதல்களுக்கு நடுவே, இமாசலபிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அம்மாநில பா.ஜனதா அரசுக்கு கங்கனாவின் தந்தையும், சகோதரியும் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில், கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய அரசுக்கு இமாசலபிரதேச அரசு வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கங்கனா ரணாவத் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நினைத்திருந்தால், என்னை மும்பைக்கு செல்லுமாறு கூறியிருக்கலாம்.
ஆனால், அவர் இந்தியாவின் மகளை மதித்ததுடன், எனது சுயமரியாதையையும் அங்கீகரித்துள்ளார். ஒரு தேசபக்தையை யாரும் நசுக்க முடியாது என்பதை இது காட்டுகிறது. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பாதுகாப்புக்கு இமாசலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத், இமாசலபிரதேசத்தின் மண்ணின் மகள். அவரது பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு அளித்தது, வரவேற்கத்தக்கது. மத்திய உள்துறை மந்திரிக்கு நன்றி.கங்கனாவின் மணாலி இல்லத்துக்கு இமாசலபிரதேச போலீஸ் பாதுகாப்பு அளிக்கும். தேவைப்பட்டால், அவர் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்படும். அவரது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வு செய்யுமாறு மாநில டி.ஜி.பி.யை கேட்டுக்கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.