full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

இந்தியில், ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆப் வசிப்பூர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். தமிழில், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் மீது இந்தி நடிகை பாயல் கோஷ், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். பிரதமர் மோடியை ‘டேக்’ செய்து, அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டைரக்டர் அனுராக் காஷ்யப் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். என் மீது பாய்ந்து மோசமாக நடந்து கொண்டார். இச்சம்பவம் 2014-2015 ஆண்டுவாக்கில் நடந்தது.
அப்போது, தனக்கு அமிதாப்பச்சன் நெருக்கமானவர் என்று அனுராக் காஷ்யப் கூறினார். மேலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இவருக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படைப்பாளிக்கு பின்னால் உள்ள சாத்தானை நாடு தெரிந்து கொள்ளட்டும். இதனால், எனக்கு தீங்கு விளையும்என்றும், எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எனக்கு தெரியும். எனவே, தயவுசெய்து உதவுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இது என் குரலை ஒடுக்கும் முயற்சி. நீண்ட காலம் எடுத்துக்கொண்டு இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதற்கு பிற நடிகைகளையும், அமிதாப்பச்சனையும் இழுக்கும் அளவுக்கு பொய் சொல்லி உள்ளார்.கொஞ்சமாவது கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் மேடம். நான் 2 திருமணங்கள் செய்துள்ளேன். அதை குற்றம் என்று சொன்னால், ஒப்புக்கொள்கிறேன். முதல் மனைவியோ, 2-வது மனைவியோ இருவரையும் பெரிதும் காதலித்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.ஆனால், இதுவரை என்னுடன் பணியாற்றிய நடிகைகளுடனோ, நான் தனியாகவோ, பொது இடத்திலோ சந்தித்த எந்த பெண்களுடனோ இந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. இப்படி நடந்து கொள்வதை நான் சகித்துக் கொள்ளவும் மாட்டேன்.
நீங்கள் சொல்வது அடிப்படை ஆதாரமற்றது. மற்றபடி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், இப்பிரச்சினையில் தேசிய பெண்கள் ஆணையம் தலையிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது:-

பெண்கள் ஆணையத்துக்கு விரிவான புகாரை அனுப்பி வைக்குமாறு பாயல் கோஷிடம் கேட்டுக்கொண்டேன். அந்த புகாரை நாங்கள் விசாரிப்போம். போலீசுக்கும் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில், டைரக்டர் அனுராக் காஷ்யப்புக்கு பிரபல தமிழ், இந்தி நடிகை டாப்சி ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் அறிந்தவரை, அனுராக் காஷ்யப்தான் மிகப்பெரிய பெண்ணியவாதி” என்று அவர் கூறியுள்ளார். நடிகை சுர்வீன் சாவ்லா, அனுபவ் சின்கா, டிஸ்கா சோப்ரா, அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆகியோர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.