அப்பாவி கதாநாயகனான உமாபதி ஒரு கிதார் கலைஞர். இவர், பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற, தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனால் மட்டுமே முடியும் என்று எண்ணுகிறார். அவருடைய உதவியை நாடுகிறார். ஆனால் உண்மையில் பயந்தாங்கொள்ளியான கருணாகரன், கதாநாயகனான உமாபதியின் பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற, அப்பாவித்தனமான நடிப்பால் அப்பாவின் பேருக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
காமெடியிலும், நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து கலக்கியிருக்கிறார்.
நரேனின் மகளாக வரும் நாயகி ரேஷ்மா ரத்தோர் கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உமாபதிக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மனோபாலா ஏற்று நடித்துள்ள வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கும் ட்விஸ்டுகள், பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. உமாபதியின் நெருங்கிய நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வரும் கருணாகரனை, படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். அடிவாங்குவதும், அதை சமாளிப்பதும் என இவரது காட்சிகள் அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கின்றன.
ஒரு காட்சியில் தோன்றினாலும், தம்பி ராமையா தனது நடிப்பை நிறைவாக செய்து விட்டு போயிருக்கிறார். இயக்குநர் இன்பசேகர் ஒரு நல்ல கதையை உருவாக்கிக் கொடுத்து, ரசிகர்களை கலகலப்பாக்கி இருக்கிறார். கதையில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
குடும்பத்தோடு சென்றால் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பி.கே வர்மாவின் ஒளிப்பதிவு படத்தைக் கலர்புல்லாக நகர்த்தியிருக்கிறது. இமானின் பின்னனி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றன.
சினிமாவின் பார்வையில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ – காமெடி டைம்.