ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டதும், அ.தி.மு.கவின் இரு அணிகளுக்கு இடையிலான முட்டுக்கட்டை நீங்கி விட்டதாக கருதப்பட்டது. இதனால் தான் இரு அணிகளும் நேற்று இணைந்து விடும் என்ற தோற்றம் காணப்பட்டது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள சில மூத்த தலைவர்கள் மனதுக்குள் இருந்த எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் திடீர் சுனாமியாக தாக்கியதால் இரு அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பில் இழுபறி ஏற்பட்டதற்கு ஓ.பி.எஸ். அணியில் உள்ள மூத்த தலைவர்களே காரணம் என்று கூறப்பட்டது.
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி ஆலோசனை நடந்தது. முதலில் 10 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள், 14 மூத்த தலைவர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். பிறகு மாவட்ட செயலாளர்களுடன் பேசினார்.
இரவு வரை அணிகள் இணைப்பில் முடிவு ஏற்படாததால் ஓ.பி.எஸ். அணி தொண்டர்கள் இடையே சற்று வருத்தம் நிலவியது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதற்காக மனம் தளரவில்லை. மூத்த தலைவர்கள் புறப்பட்டு சென்ற பிறகும் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்ட வாரியாக அவர் தனது ஆதரவாளர்களை அழைத்து பேசினார். ஒவ்வொருவரிடமும் அவர் கருத்து கேட்டார். ஆதரவாளர்கள் சொன்ன தகவல்களை அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. நள்ளிரவையும் தாண்டி இந்த ஆலோசனை நடந்தது. இன்று காலை அதிகாலை 3 மணிக்கு தான் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆலோசனையை நிறைவு செய்தார்.
ஓ.பி.எஸ். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை 10 மணி நேரம் நடத்திய மராத்தான் ஆலோசனையில் சுமார் ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பச்சை கொடி காட்டி உள்ளனர். எனவே அ.தி.மு.க. அணிகள் இணைவது உறுதி. அடுத்த வாரம் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை காணலாம் என்று இரு அணியினரும் நம்பிக்கையோடு கூறி உள்ளனர்.