full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திரை நட்சத்திரங்கள் 6 பேர் வெளியிட்ட ‘AGP’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’.

இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கிசஃப்ரீனியா ?

கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது.இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும். இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.இப்படத்தை இயக்குபவர் ரமேஷ் சுப்ரமணியன். இவர் ‘நாய்கள் ஜாக்கிரதை ‘ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் சினிமா கற்றவர் .மேலும் பல படங்களில் பணியாற்றியவர்.இந்தக் கதையைக் கேட்டு லட்சுமிமேனன் பாராட்டியதுடன், இதற்கு முன்பு, தான் 13 கதைகள் கேட்டதாகவும், பலரும் தனக்குப் பிடிக்காத கதைகளைக் கூறியதாகவும் கூறியுள்ளவர், இக்கதை கேட்டு உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இயக்குநரை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார்.

‘AGP ‘என்றால் அஞ்சலி , கெளதம், பூஜா என்கிற மூன்று பிரதான பாத்திரங்களின் முதல் எழுத்தை வைத்துப் படத்தலைப்பு உருவாகியுள்ளது.இந்த மூவர் தவிர, இன்னொரு முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமும் உண்டு. இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிக் கதை செல்கிறது.லட்சுமிமேனன் முகம் தெரிந்த நடிகை. பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள். மற்றும் பலர் தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி. இவர் ‘நிஷா ‘ என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர்.இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி.கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் வெளியிட்டார்கள். நடிகர்கள் விஜய்சேதுபதி ,ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குநர்சிம்புதேவன் , ஆகிய 6 பேர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் .

ஒரு புதிய படத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் வெளியிட்டிருப்பது படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. அது மட்டுமல்ல படம் பற்றிய எதிர்பார்ப்பையும் இப்போதே ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.