மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.
பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு வழிவகை செய்தது.
மராட்டியத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனாவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் கூறிய நிலையில் மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. ஆனால் மத்திய பிரதேசத்தில் பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பிற மாநிலங்களுக்கும் போராட்டம் பரவி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு விவசாய கடன் தள்ளுபடிக்கு உதவி என்பதில் இருந்து விலகி கொண்டு உள்ளது. மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதற்கான நிதியை மாநில அரசுகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, “மத்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். விவசாய கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களுடன் முன்செல்லும் மாநிலங்கள் அதற்கான நிதியை, அவர்களுக்கான வருவாயில் இருந்தே திரட்டிக்கொள்ள வேண்டும், மத்திய அரசாங்கத்தை பொருத்தவரையில் இவ்விவகாரத்தில் சொல்வதற்கு எதுவும் கிடையாது.” என கூறி உள்ளார்.
உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசும் விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.