அஜித் விஜய் ரஜினி ஆகியோர் மட்டும்தான் திரையுலகம் என்ற மாயபிம்பம் இருப்பதாக ஆர்கே செல்வமணி பேசியுள்ளார்.
சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி சென்று விட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு இருப்பது போலவே சினிமா துறையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாமல் பெப்சி அமைப்பை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதன் காரணமாக ஷூட்டிங்குக்கு அனுமதி அளிக்குமாறு அந்த அமைப்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தது. இதனையடுத்து பலரும் இதற்கு எதிராக விமர்சனம் செய்து வந்தனர்.
தற்போது இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்கே செல்வமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது மக்களிடம் ஒரு மாய பிம்பம் இருந்து வருகிறது. அஜித், விஜய், ரஜினி, கமல் என வெறும் 50 பேர் மட்டுமே சினிமாவுலகம் கிடையாது. இவர்கள் மட்டும்தான் நன்கு சம்பாதிப்பவர்கள். மற்றவர்கள் அனைவருமே குறைவான வருமானத்தை பெறுபவர்கள் தான். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுப்பதால் பல குடும்பங்கள் பிழைக்கும். அரசிற்கும் வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
அதேபோல் அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சம்பளத்தை ஏற்றியது போலவே குறைத்துக் கொள்ளவும் செய்வார்கள் எனும் கூறியுள்ளார்.