இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கு ஏற்ப கதைகளும், கதையின் நாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு, புகழ்பெற்ற கேரளாவின் காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. ’36 வயதினிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றும் வரவேற்பு பெற்ற இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு `காயம்குளம் கொச்சுண்ணி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாய் உருவாகவுள்ள இப்படத்தை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் ‘பழசிராஜா’ என்ற பிரம்மாண்ட படத்தையும், கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையில் எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் பணியாற்றியுள்ளனர்.
கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறுயிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இப்படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.