`நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதைத் தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அல்போன்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தனது அடுத்த படத்தை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக இவ்வளவு நாட்கள் என்னை நான் தயார்படுத்தி கொண்டேன். இசையை மையப்படுத்தி தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறேன். இசை என்பது ஒரு சமுத்திரம், அந்த சமுத்திரத்தில் எனது காலை நனைத்து, பின்னர் மெதுவாக அதில் இறங்கியிருக்கிறேன்.
இசை என்னும் கடலில் எனக்கு நீச்சல் அடிக்கவும் தெரியாது, படகை ஓட்டவும் தெரியாது, சவாரி செய்ய சொந்த கப்பலும் இல்லை. எனினும் `லைஃப் ஆப் ஃபை’ படத்தில் வரும் நாயகனுக்கு இருக்கும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தனது புதிய படத்தில் நட்பும், காதலும் இருக்கும். ஆனால் `பிரேமம்’ போன்ற முழுநீள காதல் படமாக இருக்காது. அதேபோல் `நேரம்’ படத்தை போல் நட்பு, த்ரில்லர் படமாகவும் இருக்காது. மாறாக நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான ஒரு சாதாரண படமாக இருக்கும். இந்த படத்தில் எனது நண்பன் நிவின் பாலி நடிக்கவில்லை. இன்னும் சில படங்கள் இயக்கிய பின்னர் நிவினுடன் மீண்டும் இணைவேன். மொஹ்சைன் கசீம் இயக்கி வரும் புதிய படத்தில் `பிரேமம்’ படத்தின் நடித்த சிஜு, கிருஷ்ணா சங்கர், ஷரப் யு தீன், சபரீஷ் வர்மா மீண்டும் இணைந்திருக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.