புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவி செய்த -அமிதாப் பச்சன்

Special Articles
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேலையிழந்து வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன.
இதுதவிர பிரபலங்கள் பலரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு விமானத்தில் அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்களில் 1,547 தொழிலாளர்கள் அழைத்து செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நேற்று விமானங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இன்று (வியாழக்கிழமை) விமானங்களில் சொந்த ஊருக்கு பயணிக்க உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க அமிதாப் பச்சன் 10 பஸ்களை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.