சமீபத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சத்யா.
இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாக வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கரிடம் கேட்ட போது, “நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர், அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை. ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதான் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சாரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார். படத்திற்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப் பார்த்து விட்டு எனக்கு ஐங்கரன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அது படம் முழுக்க வரும் வில்லன் ரோல்.
அந்த படம் நடித்து கொண்டிருக்கும் போதே சத்யா படத்திற்காக நடிக்க ஆடிசன் போனேன். என் நடிப்பைப் பார்த்ததும் சிபிராஜூக்கு பிடித்து போனது. அதனால் ஓகே பண்ணினார். படத்தில் வில்லன் ரோல் என்றாலும் முக்கியமான ரோல் அது. நானும் ஆனந்த்ராஜும் நடிக்கும் காட்சியில் அவருடைய நடிப்பை பார்த்து விட்டு எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இதனால் என்னை செல்லமாக கோபித்துக்கொண்டார்.
அதன் பின் நடித்து முடித்தேன். அப்புறம் ரம்யா நம்பீசன் எனக்கு மனைவியாக நடித்தார். அவருடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்தான் எப்படி கட்டிப்பிடிக்க வேண்டும். எப்படி வலிக்காமல் கையை பிடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். சத்யா படத்தைப் பார்த்து விட்டு ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு, விடியுமுன் இயக்குனர் பாலகுமார் ஆகியோர் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை நடிப்புதான் முக்கியம் எந்த கதாபாத்திரம் என்பது முக்கியமல்ல. நாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடித்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படலாம். ரசிகர்கள் கவனத்துக்கு வரமுடியும். அதனால் ரகுவரன் மாதிரியான மெஜஸ்டிக்கான வேடத்தில் நடிக்க வேண்டும்.” என்றார்.