ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார்.
இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்துடன் ஜேஎஸ்கே பிலிம்ஸ் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள்.
விழாவில் பேசிய ஸ்ரேயா ரெட்டி, “இது 9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம். இயக்குனர் கதை சொன்னபோது எனக்குப் புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க. இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம். நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளியே வந்திருக்காது.” என்றார்.
இயக்குனம் ராம், “எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டையும் வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்று கூறினார்.
விழாவில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.