full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

ஆந்திரா மெஸ் – விமர்சனம்!!

“கமெர்ஷியல்.. மாஸ்.. ஹிட்.. வியாபாரம்.. பாக்ஸ் ஆபிஸ்” என்று எதை எதையோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் போதாத காலம் இது. இந்த ஃபார்முலாக்களில் சிக்கிக் கொண்டு பல நல்ல இயக்குநர்கள் கூட தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்த “ஃபார்முலா சினிமா” வரைமுறைகளை உடைத்துக் கொண்டு அவ்வப்போது சில இயக்குநர்கள் நம்மை இயன்றளவிற்கு ஆச்சர்யப்படுத்தும் வகையில் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படி தைரியமாக முடிவெடுத்து, வித்தியாசமான முயற்சியோடு ரசிகனை நம்பி வரும் ஒரு சில இயக்குநர்களை வாழ்த்தி வரவேற்பதே, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வழிமுறை. அந்த வகையில் “ஆந்திரா மெஸ்” திரைப்படமும், அதன் இயக்குநர் ஜெய்-யும் தமிழ் சினிமாவிற்கான நம்பிக்கை வரவுகள்.

இத்திரைப்படத்திற்கு இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பாராட்டாக வெகுசன சினிமா ரசிகனுக்குத் தோன்றினாலும், மாற்றத்தையும் புதியதையும் தேடுகிற விரும்புகிற ரசிகர்களுக்கான ஃபுல் மீல்சைப் போட்டிருக்கிறது இந்த “ஆந்திரா மெஸ்”.

இந்தப் படத்தின் கதை, மிகவும் சாதாரணமான.. இதுவரையில் தமிழ் சினிமா பார்த்து சலித்துப் போன ஒரு கதை தான். ஒரு வில்லன், அவனிடம் வாங்கிய கடனுக்காக வேலை செய்யும் நான்கு அடியாட்கள். அந்த அடியாட்களில் ஒருவனின் காதல் முறிவு, அதையொட்டி அவன் எடுக்கிற முக்கியமான முடிவு. அந்த முடிவு, அந்த நான்கு அடியாட்களாகிய நண்பர்களையும் கொண்டுபோய் சேர்க்கிற ஒரு இடம். அந்த இடத்தில் இருக்கிற ஒரு வயதான பழைய ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி. அந்த இளம் மனைவிக்கும், அடியாட்களில் இன்னொருவவனாகிய நாயகனுக்கும் ஏற்படுகிற காதல். இவை அனைத்தையும் கோர்வையாக்கி, அழகாக நேர்த்தியாக நிதானமாக வழக்கமான சினிமாத் தனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு சொல்லி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட “சூது கவ்வும்”, “ஆரண்ய காண்டம்” வகையிலான ஜானர் படம். ஆனால் எந்த காட்சியும் அழுத்தமாக இல்லாமல் மேலோட்டாமாக சலனமே ஏற்படுத்தாத வகையில் சொல்லப்பட்டிருப்பதால், அந்த இடத்தை நூழிலையில் “ஜஸ்ட் மிஸ்” செய்திருக்கிறது “ஆந்திரா மெஸ்”. இருந்தாலும் ஒரு குவாலிட்டியான படமாக “ஆந்திரா மெஸ்” நினைக்க வைப்பதற்கான காரணங்கள், படத்தின் ஒளிப்பதிவு மற்றும் வசனங்கள் ஆகியவை தான்.

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி-யின் லைட்டிங் பேட்டர்ன் மற்றும் ஆங்கிள் அனைத்தும் படத்திற்கு வேற லெவல் லுக் கொடுத்திருக்கிறது. ஓவியமாய் விரிகிற ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாலும், இவரது அபார மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. வாழ்த்துகள் & வெல்கம் முகேஷ்.

இயக்குநர் ஜெய், ஒரு சாதாரணமான கதையை எடுத்துக் கொண்டு அதை இப்படியும் கவிதையாய், இயல்பாய் சொல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார். அதுவும் படத்தில் இவர் தந்திருக்கும் அந்த ஃபிலாசபிகல் வாய்ஸ் ஓவர், சூப்பர் சார். “நதி எப்போதும் ஒரே திசையில் தான் பயணிக்கும்”, “காதலுக்கும், காமத்துக்கும் எழுத்து தான் வித்தியாசம்’னு சொன்னா நம்பவாப் போற?” போன்ற கிளாசிக் டைலாக்ஸ் நிச்சயம் அப்லாஸ் அள்ளும்.

முக்கியமாக கலை இயக்குநர் செந்தில் ராகவனை சொல்லியே ஆக வேண்டும். ஜமீன்தாருடைய பழைய வீடு, அந்த வீட்டிற்குள் இருக்கிற அறை சுவர்களின் பழைய ஓவியங்கள் என அருமையான வேலைப்பாடுகளை செய்திருக்கிறார். அதிலும் ராஜ் பரத்தும், ஜமீன்தாரும் உட்கார்ந்து மது அருந்தும் இடம் “சிம்ப்ளி லவ்லி”. அதே போல் ஆடை வடிவமைப்பாளர் தாக்‌ஷா பிள்ளையின் உடை அலங்காரம் கண்களுக்கு விருந்து. அதுவும் ராஜ் பரத் அணிந்து வரும் சட்டைகள் ஒவ்வொன்றும் கலர்ஃபுல்லோ, கலர்ஃபுல்.

இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளையின் “அண்டியூண்டு” பின்னணி இசை ஒவர் புதுமை. இரண்டு பாடல்களில், “ஒரே ஓர் முதலே” பாடல் நினைவில் நிற்கிறது.

பிரபல ஓவியர் AP ஸ்ரீதர், இப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். தேர்ந்த அவரது நடிப்பு, ஒரு குணச்சித்திர நடிகரை அடையாளப்படுத்தி இருக்கிறது. ஹீரோ ராஜ் பரத்திற்கு இந்தப் படம், மிக முக்கியமானதாய் அமைந்திருக்கிறது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” என நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும் “ஆந்திரா மெஸ்” அவருக்கு நிறைய ஸ்கோப் இருக்கும் படமாக வாய்த்திருக்கிறது. கதாநாயகி தேஜஸ்வினி அட்டகாச அழகு. அவரது கண்கள் பேசுகிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களுடன் பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் ஆகியோரும் தரமான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.

அதிர வைக்கும் சண்டைக்காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் மிக எளிமையாகவும், அழகாகவும் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைத் தயாரித்திருக்கும் “ஷோ போட்” நிர்மல் கே. பாலா மாற்று சினிமாவிற்கான நம்பிக்கை தயாரிப்பாளர்.

“ஆந்திரா மெஸ்” திரைப்படத்தை பற்றிய இன்னொரு முக்கியமான விசயம், இப்படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதே. ஆனாலும் இப்போது பார்க்கையில் கூட புதுமையாக இருப்பதே, இப்படத்தின் வெற்றி தான்.