குட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடிய ஆண்ட்ரியா

News

தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா, குட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடி உள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தேனீக்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நான் தூங்கி விழித்தபோது ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை கண்டேன். எனது வீட்டின் பால்கனி அருகில் மாமரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அவை என்னை கடிக்காமல் இருக்க வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த சிலரை அழைத்தேன்.
அவற்றை பூச்சிக்கொல்லி மருந்து அடித்து சாகடிப்பது அல்லது அவற்றோடு வாழ பழகிக்கொள்வது என்ற இரண்டு வாய்ப்புகள் எனக்கு இருந்தன. எனக்கு பூச்சிகளை பார்த்தால் பயம். ஆனாலும் ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை கற்பனை செய்ய முடியவில்லை. தேனீக்கள் மீது எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். சுற்றுப்புற சூழலை காப்பதில் அவற்றின் பங்கு முக்கியமானது. தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழிந்து விடும்.
இது தேனீக்கள் பற்றிய கதையாக இருந்தாலும் தற்போது நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையும் இதில் இருக்கிறது. பால்கனியில் இருக்கும் தேனீக்களை பாதுகாப்பதில் எனக்கு பொறுப்பு இருக்கிறது என்றால் நாடு முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பு அல்லவா? தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம் உள்ளது”. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.