முதன்முறையாக விஜய் ஆண்டனி இருவேடங்களில் நடித்திருக்கும் படம். ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டை தரலாம். மேலும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தனது R ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண்ணை கற்பழிக்க முயலும் ஆட்களை அடித்து துவைக்கிறார் நமது அண்ணாதுரை. அது போலவே படம் முழுவதும் சண்டையில் மிரட்டுகி றார் விஜய் ஆண்டனி. நடிப்பில் நல்ல முன்னேற்றம். அண்ணாதுரை மற்றும் தம்பிதுரை என இரு வேடங்களில் அசத்தியிருக்கிறார். கதாநாயகி டயானா சம்பிகா தன் கதாபாத்திரத்தை இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்க கொழுக் மொழுக் என்று அழகாக இருக்கிறார். ராதா ரவி, அண்ணாதுரையின் பெற்றோர்,காளி வெங்கட், அண்ணாதுரையை ஒரு தலையாக காதலிக்கும் பெண், வில்லன் நடிகர்கள், டயானாவின் தந்தையான பத்திரிக்கையாளர் செந்தில் குமரன், ஈஸ்வரி என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தில்ராஜ் டைரக்டரின் கண்களாக செயல்பட்டுள்ளார். பின்னனி இசையில் மிரட்டுகிறார் விஜய் ஆண்டனி. படத்தொகுப்பிலும் இயல்பாக செயல்பட்டிருக்கிறார். பாடல்கள் காதை வருடுகின்றன. ”சொந்தமா பந்தமா” பாடல் அருமை. ரீ ரெக்கார்டிங் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் இயல்பான ஆள்மாறாட்டக் கதை தான். ஆனால் படத்தின் இடைவெளிக் காட்சி சுவாரஸ்யமான ஒன்று. படத்தின் முதல் பகுதியை விட இரண்டாவது பகுதி மிக நீளமாக உள்ளது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் அண்ணாதுரை ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்திருப்பான்.